தஞ்சக் கோரிக்கையாளர்களுக்காக ஒன்ராறியோவுக்கு 11 மில்லியன் டொலர்

தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான செலவீனத்திற்காக 11 மில்லியன் டொலர்களை ஒன்ராறியோ மாநில அரசுக்கு கனேடிய மத்திய அரசு அரசாங்கம் வழங்கவுள்ளது.

அமெரிக்க கனேடிய எல்லையின் ஊடாக சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுளையும் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களால் ஏற்படும் செலவீனங்களை ஈடுசெய்வதற்காக கியூபெக், ஒன்ராறியோ, மனிட்டோபா ஆகிய மாகாணங்களுக்காக மத்திய அரசினால் 50 மில்லியன் டொலர்க்ள உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அந்த தொகையிலேயே ஒன்ராறியோவுக்கு இந்த 11 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் விளக்கமளித்துள்ள மத்திய குடிவரவுத் துறை அமைச்சர் அஹ்மட் ஹூசெய்ன்,இது எல்லை தாண்டும் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்காக மத்திய அரசாங்கம் வழங்கும் இறுதி நிதி உதவி அல்ல என்று தெரிவித்துள்ளார்.

அகதிகள் விவகாரத்தினால் பெருமளவு செலவீனம் மாநிலங்களுக்கு ஏற்படும் நிலையில், அவ்வாறான செலவீனங்களில், அவசர வதிவிடத் தேவைகளுக்கான ஒரு பகுதி உதவியாகவே இந்த நிதி வழங்கப்படுவதாகவும் அவர் விபரித்துள்ளார்.

அந்த வகையில் காட்டுப் பகுதிகள் ஊடாக அதிக அளவு அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களின் வரவினை பதிவு செய்துள்ள கியூபெக் மாநிலத்திற்கு 36 மில்லியன் டொலர்களும், ஒன்ராறியோவுக்கு 11 மில்லியன் டொலர்களும், மனிட்டோபாவுக்கு 3 மில்லியன் டொலர்களும் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அகதிகளைக் கையாளும் தேவைகளுக்காக கியூபெக் 146 மில்லியன் டொலர்களையும், ரொரன்ரோ நகரம் மட்டும் 64 மில்லியன் டொலர்களையும் கோரியிருந்த நிலையிலேயே, மத்திய அரசு இந்த நிதி உதவியினை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.