ஒன்ராரியோ தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் களநிலவரம்!

வெளியே செல்வது குறைவு என்ற நிலையில் வார இறுதியில் ஒரளவு வெளியே சென்று களநிலவரங்களை பரவலாக அவதானித்தேன். ஒன்று தெளிவாகப் புரிந்தது. தேர்தல் களைகட்டவில்லை. தேர்தல் பரப்புரையில் மந்தநிலை. மக்களிடம் தேர்தல் குறித்த எவ்வித பரபரப்பும் கிடையாது. இந்நிலை சனநாயகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய ஓட்டையை சுட்டி நிற்கிறது.


1971இல் நடைபெற்ற ஒ;ன்ராரியோ பாராளுமன்ற தேர்தலில் 73.5 சதவீத வாக்குப்பதி;வில் பழமைவாதக்கட்சியின் பில் டேவிஸ் முதல்வர் ஆனார். அதன் பின்னான தேர்தல்களில் வாக்களிப்பு வீதம் குறைந்தே வந்து 2011 தேர்தலில் வரலாறாக அது 48.2 சதவீத வாக்களிப்பையே கண்டது. 2014 தேர்தலில் அது சற்று அதிகரித்து 51 சதவீதத்தை எட்டியது. ஆனால் இதே காலப்பகுதியில் நடைபெற்ற கனடிய பாராளுமன்றத்திற்கான தேர்தல்களில் ஒன்ராரியோவில் 70 சதவீத வாக்குப்பதிவு இருந்ததையும் அங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

இம்முறையும் வாக்களிப்புவீதம் குறைந்தே இருக்கப் போகின்றது என்பதை தற்போது நடைபெற்றுவரும் முன்கூட்டிய வாக்களிப்புகளும் சுட்டி நிற்கின்றன. மே 26 முதல் 30 வரை ஜந்து நாட்கள் ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் முன்கூட்டிய வாக்களிப்பு அனைத்து இடங்களிலும் மிகவும் மந்த நிலையிலேயே நடைபெறுகிறது. தொகுதியின் மொத்த வாக்குகளில் 5 சதவீத முன்கூட்டிய வாக்குப்பதிவை எட்டுவதே பல தொகுதிகளில் சவாலாகவே இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் சனநாயகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய சவாலை எதிர்கொள்வதற்கான முறைமைகள் உடன் கண்டாகப்பட்டேயாக வேண்டும். இல்லையேல் சனநாயகம் என்ற மக்கள் ஆட்சி வடிவம் பெரும் கேள்விக்குறிக்குள்ளாகிவிடும். 50 சதவீத மக்களின் வாக்களிப்பில் ஒரு அரசு தெரிவு செய்யப்படுகிறது என்றால் அது அளிக்கப்பட்ட வாக்குகளில் 40 சதவீதத்தை பெற்று கொண்டது என்று வைப்போம். அவ்வாறாயின் அது மொத்த வாக்காளர்களில் 20 சதவீதமானோரின் பிரதிநிதியாகவே ஆட்சிக்கட்டில் ஏறுகிறது. அது அவர்களின் தேவையை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்த முனைந்தால் 80 சதவீதமானோர் புறம்தள்ளப்படுவர் அல்லது ஏமாற்றத்திற்கு உள்ளாவர் என்பதை நினைக்கும் போது புரிகிறதா? சனநாயகம் எத்தகைய சவாலுக்கு உள்ளாகிறது என்று.

ஆகவே உறவுகளே உங்கள் சனநாயக உரிமையை தவறாது பயன்படுத்துங்கள். இருக்க கடந்த ஞாயிறு நடைபெற்ற இறுதித் தலைவர்கள் விவாதத்தின் பின் களத்தில் பெரிதாக எவ்வித மாற்றமும் தென்படவில்லை. லிபரல் கட்சியின் சரிவு தொடர்;கிறது. 12 ஆசனங்களைப் பெற்று அடுத்த பாராளுமன்றத்தில் உத்தியோக பூர்வ கட்சி அந்தஸ்தை பேணுவதே முடியாத காரியமாகவே படுகிறது. குறைந்த வாக்களிப்பு முற்போக்கு பழமைவாதக் கட்சிக்கு அனுகூலமாக அமையலாம். ஏனெனில் அதனிடமே உறுதியான ஒரு வாக்காளர் கூட்டம் இருக்கிறது. அது அறுதிப்பெரும்பான்மையான 63 ஆசனங்களுக்கு சற்று மேலேயே ஊசலாடி வருகின்றது. அது அந்நிலையை தொடர்ந்தும் இவ்வார இறுதி கடந்தும் தக்கவைத்தால் அது தேர்தல் முடிவில் குறுகிய பெருன்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அல்லது அதிக ஆசனங்கபை; பெற்ற கட்சியாகும்.

புதிய சனநாயக்கட்சி முன்னேறி வந்தாலும் கடந்த ஒரு வாரமாக அது அதீத முன்னேற்றம் எதையும் காட்டவில்லை. அது அதன் உச்சத்தை தொட்டுவிட்டது போன்ற தோற்றப்பாடே நிலவுகிறது. லிபரலில் இருந்து மேலதிகமானோர் புதிய சனநாயக்கட்சியை நோக்கி நகர்ந்தாலோ அல்லது இதுவரை தீர்மானம் இன்றி இருக்கும் வாக்காளர்கள் புதிய சனநாயக்கட்சியை நோக்கி நகர்ந்தாலோ இதில் மாற்றம் ஏற்படலாம். இந்த வார இறுதி அது சாத்தியமா? என்ற கேள்விக்கான பதிலைத் தரும். அது தவிர இவ்வாறு நகரும் மென்வாக்குகளை வாக்களிப்பு நிலையம் வரை இட்டுச்செல்வதும் பழமைவாதக்கட்சியின் பலவீனமான 15 தொகுதிகளில் உடைப்பை ஏற்படுத்துவதிலுமேயே புதிய சனநாயக்கட்சியின் ஆட்சியமைக்கும் நிலை தங்கியுள்ளது. இது ஒரு பெரும் சவால் நிலையே. வரும் செவ்வாய் இறுதித் தேர்தல் முடிவு என்ன என்று பார்ப்போம். அதுவரை தவறாது வாக்களியுங்கள். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு இடத்தில் யூன் 6ஆம் நாள் வரை தொடர்ச்சியாக நீங்கள் முன்கூட்டி வாக்கை பதிவு செய்யும் பிரிதொரு முறையும் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். அது குறித்த விபரம் உங்கள் வாக்காளர் அட்டையில் உண்டு.

Written & Analytics by: Nehru Gunaratnam