அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்க கனடா திட்டம்!

கனடாவில் இருந்தும் இறக்குமதி செய்யும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு அமெரிக்கா வரி விதித்துள்ள நிலையில், அமெரிக்க இறக்குமதிப் பெருட்களுக்கு கனடாவும் வரி விதிப்பதற்கு எண்ணியுள்ளது.


அதன் படி யூலை மாதம் முதல் நாளில் இருந்து 13 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது 25 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதற்கு கனடா தீர்மானித்துள்ளது.

எஃகுவிற்கு 25சதவீத வரியும், அலுமினியத்திற்கு 10 சதவீத வரியையும் அமெரிக்க அதிபர் விதித்துள்ளதுடன், அந்த வரி விதிப்பு இன்று வெள்ளிக்கிழமையில் இருந்து நடப்பிற்கு வருகின்றது.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு கனடா மாத்திரம் அன்றி எஃகு மற்றும் அலுமினியம் ஆகிய பொருட்களை அமெரிக்கா தருவித்துக்கொள்ளும் ஏனைய நாடுகளான மெக்சிக்கோ, ஐரோப்பிய ஒன்றியம் போன்றனவும் தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

ஆனால் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உருக்கு மற்றும் அலுமினியம் உற்பத்தியாளர்கள் மிகவும் முக்கியம் என்றும், சர்வதேச அளவில் அவற்றில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வரிவிதிப்பை டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளது தங்களை அவமானப்படுத்தும் செயல் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கனடா அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அமெரிக்காவின் வரிவிதிப்பினால் பாதிக்கபபட்டுள்ள கனேடிய எஃகு மற்றும் அலுமிய நிறுவனங்களின் வேலை மற்றும் பணியாளர்கள் பாதிக்கப்படாத நிலையை உறுதிப்படுத்தும் விதமாக தாம் செயற்பட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

கனடா, மெக்சிக்கோ, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டாக காணப்படும் NAFTA எனப்படும் வட அமெரிக்கத் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுக்கள் இழுபறி நிலையில் இருந்து வருவதுடன், அதில் இணக்கப்பாடு ஏற்பட்டால் தற்போதைய இந்த எஃகு மற்றும் அலுமினிய வரி விதிப்பில் கனடா மற்றும் மெக்சிக்கோவிற்கு சலுகை அளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் முன்னர் அறிவித்திருந்தார்.

எனினும் அந்த பேச்சுக்கள் தொடர்கின்ற போதிலும் இதுவரையில் தீர்வுகள் எவையும் எட்டப்படாததுடன், அவ்வாறு தீர்வுகள் எட்டப்படுவதில் சிரமங்களே தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வட அமெரிக்கத் தடையற்ற வர்த்தக உடன்படிக்கையை மறு-ஆய்வு செய்வது தொடர்பான பேச்சில் இணக்கம் காணப்படாது விடின், கனடாவுக்கும், மெக்ஸிகோவுக்கும் வரி விலக்கு அளிக்கமுடியாது என்றும் அமெரிக்க அதிபர் கடந்த வியாழக்கிழமையும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.