இறுதித் தலைவர்கள் விவாதமும் முடிவடைந்து விட்டது. அடுத்து என்ன?

மே 27ஆம் நாள் ஞாயிறு மாலை மூன்றாவதும் இறுதியானதுமான கட்சித் தலைவர்கள் விவாதமும் நடந்து முடிந்துவிட்டது.  எவரும் பாரிய தவறெதெனையும் செய்யவில்லை என்றே கூறலாம். சனி முதல் முற்கூட்டிய வாக்களிப்பில் மக்களும் வாக்களிக்க ஆரம்பித்துவிட்டனர். இன்னும் 10 நாட்களில் இறுதி வாக்களிப்பு.

லிபரல் கட்சியைப் பொறுத்தவரை இத் தேர்தலில் பெரும் சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. அதன் தற்போதைய ஒரே இலக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதல்ல. குறைந்தது 12 ஆசனங்களையாவது பெறுவது. இல்லையேல் அது அடுத்த பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வ கட்சி அந்தஸ்தையே இழந்துவிடும். அவ்வாறாயின் தற்போதைய தேர்தல் நிதிதிரட்டும் சட்டத்தின் கீழ் அடுத்த புதிய லிபரல் தலைவருக்கு கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவது பெருத்த சவால் நிறைந்த பணியாகிவிடும். இன்றைய விவாதத்தில் சிறப்பாகவே விவாதித்த கதலீன் வெயின் தனது கட்சியின் தொடர் சரிவை ஒரளவாவது கட்டுக்குள் கொண்டுவருவாரா? என்பதை வரும் நாட்களில் பார்க்கப்போகிறோம்.

கொன்சவேட்டிவ் அசைக்கமுடியாத பெரும்பான்மை ஆட்சியை நோக்கி வீறுநடைபோட்டுக் கொண்டிருந்த கட்சி தற்போது நாளும் பெரும்பான்மையில் சுருங்கி வருகிறது. தனது இருப்பிற்கு பெரும் பங்கம் எதனையும் டக் போட் இன்றைய விவாதத்தில் ஏற்படுத்தவில்லை ஆயினும் புதிய வாக்காளர்களை தனது கட்சியை நோக்கி இழுத்தெடுப்பதில் பெரிதாக எதனையும் சாதித்துவிடவில்லை என்றே சொல்லவேண்டும். இதுவரை லிபரல் கட்சியை மையப்படுத்திய தாக்குதல்கள் தற்போது புதிய சனநாயகக்கட்சியை மையப்படுத்தியதாக மாறியிருக்கிறது. இது புதிய சனநாயகக்கட்சியின் வளர்ச்சியைத் தடுக்குமா? மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் கன்சவேட்டிவ் ஆட்சியமைவது சாத்தியமா? என்பதை வரும் நாட்கள் தெளிவாக உணர்த்தி நிற்கும்.

புதிய சனநாயகக்கட்சி இறுதி கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலும் முன்னணி நிலைக்கு வந்திருக்கிறது. எனினும் அறுதிப்பெருன்பான்மை ஆட்சியமைக்கும் நிலைக்கு இன்னும் வரவில்லை. அதை நோக்கிய நொக் அவுட் பஞ் எனப்படும் மரண அடியை அன்ரியா கோவெட் இன்று வழங்கவில்லை. வந்தடைந்திருக்கும் நிலையை தக்கவைக்கவேண்டும் என்பதில் அதீத கவனம் எடுத்துக் கொண்டார். லிபரல் வாக்கு வங்கிலும் ஆசனங்களிலும் கணிசமானவற்றை ஏற்கனவே அவர் தன்னகப்படுத்தியுள்ள நிலையில் வீரியம் குறைந்த கன்சவேட்டிவ் ஆசனங்கள் 15ஜ ஆவது குறிவைத்து கைப்பற்றினாலேயே அவரால் பெரும்பான்மை ஆட்சியை நோக்கி நகர முடியும். ஏனைய இருவரையும் விட இவரிடம் இம்முறை அதீதமாக உள்ளது. அனைத்து தொழிற்சங்கங்களும் இவரின் கட்சியின் பின்னால் அணிவகுத்து நிற்பதே. பெரும் தேர்தல் களநிலைச் சக்தியான இவர்கள் பெரும்பான்மை ஆட்சியை நோக்கிய அந்த இறுதி அஸ்திரத்தை என்டிபிக்கு வழங்குவார்களா? என்பதை வரும் நாட்களில் கூர்ந்து அவதானிக்கப் போகின்றோம்.

by: Nehru Gunaratnam