ஸ்காபுரோ பகுதியில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை

ரொரன்ரோ மல்வேர்ன் பகுதியில் நேற்று ஞாயிறுக்கிழமை இரவு 10:20 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Tapscott வீதி மற்றும் Washburn Way பகுதியில் அமைந்துள்ள Lester B. Pearson உயர்நிலை பாடசாலைக்கு அருகாமையில் நேற்றிரவு தலையில் சுடப்பட்ட நிலையில் உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது கொல்லப்பட்டவர் 21 வயதான வினோஜன் சுதேசன் (Venojan Suthesan) என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அந்த இளைஞர் சம்பவம் இடம்பெற்ற அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை என்ற போதிலும், தாம் சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்ற ஒருவரைத் தேடி வருவதாக காவல்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடம் குடியிருப்பு பகுதி என்பதனால், ஒவ்வொரு வீடு வீடாக சென்று கண்காணிப்பு காணொளிப் பதிவுகள் மற்றும் சாட்சியங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொல்லப்பட்ட அந்த இளைஞர் யோர்க் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் படித்து வருவதாகவும், அவர் எப்போதும் இப்படியான விவகாரங்கள், முரண்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்பவர் அல்ல எனவும் அவரது உறவினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.