மோர்னிங்சைட் அவனியூ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளது!

நெடுஞ்சாலை 401இன் அருகாமையில் மோர்னிங்சைட் அவனியூ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக காணாமல் போனவருடையது என பொலிஸார் இனங்கண்டுள்ளனர்.

குறித்த உடற்பாகம் கரி எட்வேர்ட் வீசே என்பவருடையது எனவும், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி இவர் காணாமல் போன வேளையில், இவருக்கு வயது 64 எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனுடன் தொடர்பற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மோர்னிங்சைட் அவனியூ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் சந்தேக நபர் ஒருவரைத் தேடிச் சென்ற போது, குறித்த இந்த மனித எச்சத்தினை பொலிஸார் கண்டுள்ளனர்.

இந்த மரணத்தில் சதிச் செயல்கள் இருப்பதாக இதுவரை சந்தேகிக்கப்படவில்லை எனவும், எனினும் இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்