அகதிகளுக்கு ரொறன்ரோவில் முகாம்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்!

கனடாவிற்கு அடைக்கலம் தேடிவரும் அகதிகளுக்கு ரொறன்ரோவில் முகாம்கள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அவசரகாலத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றுத் திட்டத்தின்கீழ் ரொறன்ரோவில் குறித்த முகாம்கள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் கோடைக்காலத்தில் கனடாவை நோக்கி அதிகளவில் அகதிகள் வரக்கூடும். அப்போது அந்த நெருக்கடிகளை சமாளிக்க இந்தத் திட்டம் உதவும்.

ரொறன்ரோவில் உள்ள கல்லூரி ஒன்றின் விடுதியில் 800 பேரைத் தங்க வைக்கவுள்ளோம். ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் அவர்களை சமூக நிலையங்களில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளோம்; என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், 27,000க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கலம் நாடி அமெரிக்காவில் இருந்து கனடாவுக்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.