மிசிசாகாவில் குண்டு வெடிப்பு

மிசிசாகாவில் அமைந்துள்ள இந்திய உணவகம் ஒன்றில் நேற்று இரவு குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், குறைந்தது 3 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிசிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதனை பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர்களைத் தவிர ஏனைய 12 பேரும் ஆபத்தற்ற காயங்களுடன் இரண்டு உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோர்ரோன்ராறியோ வீதி மற்றும் எக்ளிங்டன் அவனியூ பகுதியில் அமைந்துள்ள, பொம்பே பெல் எனப்படும் அந்த உணவத்தில் நேற்று இரவு 10.30 அளவில் இந்த குண்டு வெடிப்பு சம்பவித்துள்ளது.

அந்த உணவகத்தினுள் நுளைந்த இரண்டு சந்தேக நபர்கள், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட குண்டு ஒன்றினை வெடிக்க வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் இள நிறம் கொண்ட, சுமார் 20 வயது மதிக்கத்தக்க, சுமார் ஐந்து அடி பத்து அங்குல உயரம் கொண்ட ஆண் எனவும், மெல்லிய உடல்வாகு கொண்ட அவர் வெளிறிய நீல நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.

மற்றைய சந்தேக நபரும் ஏறக்குறைய அதேமாதிரியான அடையாளங்களைக் கொண்டவர் எனவும், அவர் கடும் நீல நிற காற்சட்டையும், தலையை மூடிய குளிர் அங்கியும் அணிந்திருந்ததாகவும், இருவரது முகங்களும கறுப்பு நிற துணியால் மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில், அல்லது சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தோர், குற்றத் தடுப்பு பிரிவினரை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.