பழமைவாத கட்சியும் (PC), புதிய ஜனநாயகக் கட்சியும் (NDP) சம பலத்தில்!

ஒன்ராறியோ மாகாண தேர்தல் நெருங்கும் நிலையில், பழமைவாதக் கட்சிக்கு சமமாக புதிய ஜனநாயக கட்சியும் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதாக அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டியுள்ளன.

ஒன்ராறியோ சட்டமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் யூன் ஏழாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்களில் ஆன்ட்ரியா ஹோர்வத் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி மக்கள் ஆதரவு நிலைப்பாட்டில் மூன்றாம் நிலையில் காணப்பட்டது.

எனினும் அதன் பின்னரான கருத்துக்க கணிப்புக்களில் மிக வேகமாக முன்னேறி லிபரல் கட்சியை பின்தள்ளியதுடன், தற்போதைய கருத்துக் கணிப்பில் பல புள்ளிகளால் முன்னணியில் இருந்த பழமைவாதக் கட்சிக்கு சமமான ஆதரவு நிலைப்பாட்டை பெற்று பழமைவாதக் கட்சிக்கு சவாலாக உருவெடுத்துள்ளது.

அண்மையில் நடாத்தப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில், புதிய ஜனநாயக கட்சியும், முற்போக்கு பழமைவாதக் கட்சியியும் 37 சதவீத மக்கள் ஆதரவுடன் சமநிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை லிபரல் கட்சி 21 சதவீத ஆதரவினை கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும் இந்த கருத்துக் கணிப்பின் போது கருத்துரைத்தவர்களுள் தாங்கள் இன்னமும் யாருக்கு வாக்களிப்பது என்பதனைத் தீர்மானிக்கவில்லை என்று பலரும், குறிப்பாக மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை லிபரல் கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து 21 சதவீதத்தினை தொட்டுள்ளது மட்டுமின்றி, லிபரல் கட்சியின் ஆதரவாளர்களில் 63 சதவீதம் பேர் தமது இரண்டாவது தெரிவாக புதிய ஜனநாயக கட்சியினைக் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி ஆதரவாளர்களில் 40 சதவீதமானோரும், தமது இரண்டாவது தெரிவாக புதிய ஜனநாயக கட்சியினைக் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் தற்போது காணப்படும் இந்த நிலைப்பாடு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மாற்றத்தினைக் காணக்கூடும் என்று கருத்துக் கணிப்பினை மேற்கொண்ட நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடுகையில் மக்கள் ஆதரவு புதிய ஜனநாயக கட்சிக்கு சார்பாக பெரும் மாற்றத்தினைக் கண்டுள்ளதனையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.