கடவுச் சீட்டுகளின் திறன் குறித்த மதிப்பீட்டில் கனடாவுக்கு ஐந்தாவது இடம்!

உலக அளவில் நாடுகளின் கடவுச் சீட்டுகளின் திறன் குறித்த மதிப்பீட்டில், கனடா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

அனைத்துலக விமான போக்குவரத்து கூட்டமைப்பிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 189 நாடுகளை உள்ளடக்கிய கடவுச் சீட்டுகளின் திறன் குறித்த இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

ஒருவர் கொண்டிருக்கும் கடவுச் சீட்டின் மதிப்பு பெறுமானத்தினை பொறுத்து, அந்த நபரின், அல்லது அந்த நாட்டு பிரஜைகளின் பயண மதிப்பும் தீர்மானிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டு 189 நாடுகளின் கடவுச் சீட்டுகளும் மதிப்பீடு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது.

குறித்த பட்டியலில் ஜப்பான் முதல் நிலையிலும், ஜேர்மனி இரண்டாம் இடத்திலும், ஃபின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, தென்கொரியா, ஸ்பெய்ன், சுவீடன் ஆகிய நாடுகள் மூன்றாம் நிலையிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.

அவற்றை அடுத்து ஒஸ்ரியா, லெக்ஸம்பேர்க், நெதர்லாந்து, நோர்வே, போர்த்துக்கல், பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் நான்காவது நிலையிலும், கனடா, பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து, சுவீட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஐந்தாவது நிலையிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.

வீசா எனப்படும் நுளைவு இசைவு எண்ணிக்கையின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக நாடுகளுக்கு நுளைவிசைவு இன்றி பயணிக்க கூடிய பயணச்சீட்டுகள் முன்னிலையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒருவர் எத்தனை நாடுகளுக்கு நுளைவிசைவு இன்றி பயணிகக் முடியும் என்பதனை அடிப்படையாக வைத்தே அந்த நாட்டு பிரஜையின் சுதந்திரத்தின் அளவு தீர்மானிக்ப்படுகிறது எனவும், அந்த வகையில் ஒரு நாட்டு குடிமகனின் பெறுமானத்தினை தீர்மானிப்பதில் இந்த கடவுச்சீட்டின் தகுதி முக்கிய பங்கு வகிக்கிறது எனவும், இந்த ஆய்வு முடிவினை வெளியிட்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறு சிறந்த கடவுச் சீட்டுகளைக் கொண்டுள்ள நாடுகள், பெரும்பாலான ஏனைய நாடுகளுடன் சிறந்த அரச தந்திர உறவுகளைப் பேணுகின்றன என்பதையும் குறித்த அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது