இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கனடிய பிரதமர்!

பொறுப்புக்கூறும் செயல்முறையொன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே கேட்டுக் கொண்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் போரின் நினைவுதினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அவ்வறிக்கையில், “ஆயுதப் போராட்டத்தின்போது அழிவுகளிலிருந்து உயிர் தப்பியோருக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும்.

இருபத்தாறு ஆண்டுகளாக நீடித்த போரினால் மக்கள் இடப் பெயர்ந்தனர். போரில் உயிர் பிழைத்தவர்கள் காணாமல் போனோரின் நிலை குறித்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

போரினால் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்ட கனடாவில் வாழும் பல தமிழர்களின் நீடித்த சமாதானத்தையும் உண்மையான நல்லிணக்கத்தையும் அடைவதற்கான தேவையை நினைவூட்டுகின்றேன்.

இந்த நினைவு நாளில், தமிழ் கனேடியர்களுக்கும், ஆயுதப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.