சக்திப் பாதுகாப்புக்காக 4.2 பில்லியன் டொலர்களை ஒதுக்கும் ஒன்ராறியோ பசுமைக் கட்சி!

ஒன்ராறியோவில் சக்திவளப் பாதுகாப்பு திட்டங்களுக்காக, சுமார் 4.2 பில்லியன் டொலர்களை ஒதுக்க ஒன்ராறியோ பசுமைக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஒன்ராறியோ பசுமைக் கட்சி வெளியிட்டுள்ள தனது தேர்தல் அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

மேலும், மாகாணத்தினை சுத்தமான சக்திவளத் திடடங்கள் நோக்கி நகர்த்திச் செல்லவுள்ளதாகவும், குறிப்பாக மீள் உருவாக்க சக்தி வளங்களை ஏற்படுத்தவுள்ளதாகவும், இதன்மூலம் வேலை வாய்ப்பினைப் பெருக்கவுள்ளதாகவும், 2050ஆம் ஆண்டில் மாநிலத்தினை 100 சதவீத மீளுருவாக்க தூய சக்திவள பிராந்தியமாக்கவுள்ளதாகவும் தனது அறிக்கையில் பசுமைக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் 4.2 பில்லியன் டொலர்களை சக்திப் பாதுகாப்புக்காக வர்த்தக நிறுவனங்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் மானியமாக வழங்கவுள்ளதாகவும் பசுமைக் கட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக பிக்கறிங் பகுதியில் உள்ள அணுசக்தி ஆலையை மூடுவதன் மூலம் 1.1 பில்லியன் டொலர்களை மீதப்படுத்தவுள்ளதாகவும், கியூபெக்கில் இருந்து தேவையான மின்சாரத்தை வாங்கவுள்ளதாகவும் பசுமைக் கட்சி விபரித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு 4.1 பில்லியன் டொலர்களை உளவள ஆரோக்கிய மேம்பாட்டுக்காக தமது கட்சி செலவிடும் எனவும் ஒன்ராறியோ பசுமைக் கட்சி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது