ஒன்ராறியோ தேர்தல் : லிபரல், புதிய சனநாயக கட்சி இடையே கூட்டணி?

ஒன்ராறியோவில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து கட்சிகள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

தேர்தலில் முறபோக்கு பழமைவாதக் கட்சி அதிக வாக்குகளை பெற்றுவிட்டால், லிபரல் கட்சியும், புதிய சனநாயக கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்குமா என்று கேள்வி முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த இரண்டு கட்சிகளின் தலைவர்களும் கருத்துக் கூற மறுத்துள்ளனர்.

அவ்வாறான ஒரு கூட்டு ஆட்சிக்கான சாத்தியப்பாடுகள் குறித்து தற்போதைக்கு தாம் கருத்துக்கூற விரும்பவிலலை என்று தேர்தல் பரப்புரைகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டிருக்கும் லிபரல் கட்சித் தலைவர் கத்தலின் வின் மற்றும், புதிய சனநாயக கட்சித் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத் ஆகியோர் கூறியுள்ளனர்.

ரொரன்ரோ வடக்கில் ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய கத்தலின் வின் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இரண்டு கட்சிகளுக்கும் இடையே பல்வேறு வகைகளில் ஒருமித்த போக்குகள் காணப்பட்டுள்ள போதிலும், புதிய சனநாயக கட்சியின் வர்த்தக வரிக் கொள்கை ஒன்ராறியோவின் போட்டித் தன்மையை குறைக்கும் வகையில் காணப்படுவதாகவும், அதனால் அந்த கட்சியுடன் அணி சேர்வது குறித்து சிந்திக்கவேண்டி இருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதத்துக்கும் சற்று குறைவான காலப்பகுதி காணப்படுவதனால், இந்த அரசியல் கூட்டணி குறித்து இவ்வளவு முற்கூட்டியே கருத்து கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறே இந்த கூட்டணி அமைப்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள புதிய சனாநாயகக் கட்சியின் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத், தமது கட்சி பலத்த மக்கள் ஆதரவுடன் பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பதிவு செய்ததுடன், அதற்கு மாறான முடிவுகள் கிட்டினாலும் லிபரலுடன் கூட்டுச் சேர்வது அரிதானதே என்றும் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை ரொரன்ரோவின் கிழககு பிராந்தியத்தில் பரப்புரையில் ஈடுபட்ட போது அவர் இதனைத் தெரித்துள்ளார்.

குறிப்பாக வர்த்தக வரி விடயத்தில் தமது கொள்கைக்கு மாறான கொள்கையுடைய கட்சியுடன் தாம் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை எனவும, அவ்வாறான வரிக் கொள்கைகள் ஒன்ராறியோ மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கவே வழி செய்யும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

குறித்த இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள இரண்டு கட்சிகளின் தலைவர்களும் எவ்வாறெனினும் தேர்தல் முடிவுளுக்கு முன்னர் இது தொடர்பில் தீர்க்கமாக எதனையும் கூற முடியாது என்ற கருத்தினை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.