ரொறன்ரோ தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

ரொறன்ரோ வாகன தாக்குதலில் உயரிழந்தவர்களுக்காக, பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

கனடாவின் பொருளியல், வணிக மற்றும் கல்வி மையமாக விளங்கும் ரொறன்ரோவில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்தனர். கனடாவில் மிகப்பெரிய வெகுஜன படுகொலை இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் வாகனத்தால் மோதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான அலெக் மினாஷியன் மீது 10 பிரிவுகளில் கொலைக்குற்றமும், திட்டமிட்ட கொலை முயற்சி தொடர்பாக 13 பிரிவுகளிலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் கூட்டம் நேற்று இடம்பெற்றது.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் இருக்கும் மெல் டாஸ்ட்மென் சதுக்கத்தில் (Mel Lastman Square) ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர்.

பல அரசியல்வாதிகள், பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ, பிரீமியர் காத்லீன் வின், மேயர் ஜோன் டோரி மற்றும் கூட்டாட்சி தேசிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜக்மித் சிங் உள்ளிட்ட பலர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் மூலம் உறுதியான ரொறன்ரோ (Toronto Strong) எனும் தொனிப்பெருளில் அனைவரும் ஒரு பெரிய குழுவாக ஒன்றாக சேர்ந்து கொண்டு, நாங்கள் வலுவாக உள்ளோம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதைக் காட்டுகிறது என நிகழ்வின் ஒருங்கமைப்பாளர்கள் கூறினர்.