டி இமான் நிகழ்ச்சி (ஊடக) சந்திப்பு!

நாளை சனிக்கிழமை 28ம் திகதி கனடாவின் பிரம்டன் மாநகரில் பவர் ரேட் சென்டர் (Power Trade Centre) இல் இசை எம்பயர் நிறுவனம் மற்றும் யோகி & பார்ட்னர்ஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இசையமைப்பாளர் டி.இமான் அவர்களின் மாபெரும் இசை நிகழ்ச்சி குறித்த  (ஊடகவியலாளர்கள்) சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை ஸ்காபுறோவில் நடைபெற்றது. ஊடகவியலாளர்கள் சந்திப்புக்கு இசையமைப்பளர் டி. இமான் அவர்கள் தனது குழுவோடு வந்திருந்தார்.

மிகவும் சிறப்பாக நடந்த இந்த சந்திப்பில் டி. இமான் அவர்கள் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.  மிகவும் சிரித்த முகத்துடன் இயல்பாக அனைவரிடமும் பண்பாக உரையாற்றினார்.

இசையை விட மொழிதான் மிகவும் முக்கியம் என்றும், தன்னிடத்தில் வரும் பாடக பாடகிகள் உலகின் எந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது தமிழ் உச்சரிப்பு சரியாக உள்ளதா என்பதையே தான் மிகவும் உன்னிப்பாகக் கவனிப்பேன் என்றார்.  மொழிக்கு பின்  தான் இசை என்றும் இதற்க்கு எந்த விட்டுக்கொடுப்பும் இல்லை என்றும் கூறி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

இதுவரை 100 க்கும் மேற்ப்பட்ட புதியவர்களை அறிமுகப்படுத்தி உள்ளேன் என்றும் செல்வி லக்சுமி சிவனேஸ்வரலிங்கம் என்னும் பாடகிக்கு “போகன்” திரைப்படத்தில் ” செந்தூரா” என்னும் பாடலைப் பாடும் சந்தர்ப்பத்தை வழங்கி லக்சுமியை உலக இரசிகளின் மனங்களில் தங்கவைத்த பின் இப்போது “மிக அண்மையில் தான்  இசையமைத்த திரைப்படம் ஒன்றில் கனடாவைச் சேர்ந்த பாடகி செல்வி ஐஸ்வர்யா சந்துரு மற்றும் கனடாவில் இருந்து மேலும் இருவருக்கும் பாடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  தொடர்ந்து மேலும் சில பாடக பாடகிகளுக்கு சந்தர்ப்பஙகள் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர்கள் மலேசியா, ஜேர்மனி, நோர்வோ, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பாடக பாடகிகள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது” என்று கூறினார்.

“எனக்கு தலைவர் பிரபாகரன் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவரை நான் எப்போதும் போற்றுவதுண்டு.  கவிஞர் காசி ஆனந்தனின வரிகளில் எழுதப்பட்ட இருப்பாய் தமிழா நெருப்பாய் பாடல்கள் “உச்சி முகர்ந்தால்” என்ற திரைப்படத்திற்காக தன்னால் உருவாக்கபட்டன என்றார்.  அந்த திரைப்படம் ஈழத்து மக்கள், போராட்டம் ஆகியவற்றின் வலிகளைச் சொல்லுவதான ஒன்று என்று தனது ஈழ தமிழர்களுடனான உறவுகளை பகிர்ந்துகொண்டார்.

இலங்கை தமிழர் என்று அழைப்பதை விட ஈழத்தமிழர் என்று அழைக்கவே முற்றுமுழுதான பாசத்தை உணர்வதாகவும் கூறினார்.

மேலும் கலைஞர்கள் தங்கள் சுய கௌரவத்தை இழந்து சந்தர்ப்பம் கேட்கத்தேவையில்லை என்றும், உங்கள் திறமையில் கர்வமாக இருங்கள் என்றும் மேடையில் பாடுபவர்களோ அல்லது வாத்திய கலைஞர்களோ தனது கவனத்தை ஈர்க்க வேண்டியதேவையில்லை என்றும் உங்கள் திறமைகளை ஒரு YouTube லோ அல்லது ஏதோ ஒரு சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிவிட்டால் தானோ அல்லது வேறு இசை அமைப்பாளர்களோ தமக்கு தேவை ஏற்ப்படும் போது உங்களை அணுகுவார்கள் என்றும் வளர துடிக்கும் கலைஞர்களுக்கு அதன் வழியையும் சொல்லி தனது ஊடக சந்திப்பை நிறைவு செய்தார்.

ஊடக சந்திப்பென்று அழைத்துவிட்டு திருமதி சில்வியா பிரான்சிஸின் உரையோடு ஆரம்பித்து அவரது கேள்வி பதிலுடனேயே நிறைவு பெற்றது பெரும் ஏமாற்றம்.

ஊடக சந்திப்பென்பது ஊடகங்களுக்கும் கேள்விகேட்பதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படுவதே ஊடக சந்திப்பென்று இருந்த; இருக்கிற நிலையில் ஊடகங்கள் வந்து சொல்வதை கேட்டுவிட்டு போய் எழுதுவதை எழுதுங்கள் என்ற நிலையிலேயே இந்த சந்திப்பு தொகுக்கப்பட்டிருந்தது.  

இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் செயலே அன்றி டி . இமான் அவர்களின் செயல் அன்று.

இந்த இசை நிகழ்ச்சி முற்றுமுழுதாக ஒரு பொழுதுபோக்காக இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்பதை டி . இமான் அவரது பேச்சு தெளிவாக காட்டியது.

நாளை சனிக்கிழமை 28ம் திகதி கனடாவின் பிரம்டன் மாநகரில் பவர் ட்ரடே சென்டர் இல் இசை எம்பயர் நிறுவனம் மற்றும் யோகி அ ன்ட் பார்ட்னர்ஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள பிரபல இசையமைப்பாளர் இமான் அவர்களின் மாபெரும் இசை நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

D IMMAN LIVE IN TORONTO