ரொறன்ரோ சிற்றூர்தி தாக்குதலில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரம்!

ரொறன்ரோ – நோர்த் யோர்க் பகுதியில் அரங்கேறிய சிற்றூர்தி தாக்குதலில் உயிரிழந்த அனைவரையும் அடையாளம் காண்பதற்காக தடயவியல் நிபுணர்கள் தகவல்களைத் திரட்டி வருவதாக ஒன்ராறியோ மாகாணத்தின் தலைமை மரணவிசாரணை அதிகாரியான மருத்துவர் டிர்க் ஹியூவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தம்முடைய அடையாள ஆவணங்களை மக்கள் தம்முடன் வைத்திருப்பது வழக்கம் எனவும், அவற்றின் மூலம் அவர்களது உறவினர்களை தொடர்புகொண்டு, அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி உயிரிழந்வர்களை அறிவியல் அடிப்படையிலும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுப்பதாகவும், குறிப்பாக பல்வரிசை ஊடுகதிர் பட ஒப்பீடுகள், கைவிரல் அடையாள ஒப்பீடுகள், மரபியல் கூற்று ஒப்பீடுகள் போன்றவையும் மேற்கொள்ளப்படும் நிலையில், அவ்வாறான தகவல்களை தாம் சேகரித்து வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

உயிரிழப்புகள் சம்பவிக்கும் வேளைகளில், வெளிப் பார்வை ரீதியான உறுதிப்படுத்தல்கள் மட்டும் போதுமானது இல்லை எனவும், உயிரிழந்த பின்னர், குறிப்பாக மோசமான காயங்களின் காரணமாக அவர்களின் தோற்றங்கள் மாறுபட்டு காணப்படக்கூடும் எனவும் விளக்கமளித்துள்ளார்.

அந்த வகையில் அனைத்து பத்து பேரின் அடையாளங்களையும் அனைத்து வழிகளிலும் முற்று முழுதாக உறுதிப்படுத்துவதற்கு சில நாட்கள் ஆகக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோவில் கடந்த 23ஆம் திகதி பாதசாரிகள் மீது சிற்றூர்தியை மோதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் படுகாயமடைந்திருந்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய அலெக் மினாஷியன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.