ரொறன்ரோ வாகன தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு!

ரொரன்ரோ- நோர்த் யோர்க் பகுதியில் நடந்த வான் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வொன்று டொரோண்டோ மாநகரசபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரொறன்ரோ நகர நிர்வாகத்தின் சார்ப்பாக, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 7 மணியளவில் மெல் டாஸ்ட்மென் சதுக்கத்தில் குறித்த வணக்க நிகழ்வு நடாத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வை மாநகரசபை டொரொன்டோவின் பல்வேறு சமூகங்கள் மற்றும் சமூக குழுக்களுடனும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், மதத் தலைவர்கள் என பெரும்பாலனோர் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரொரன்ரோவில் கடந்த 23ஆம் திகதி, பாதசாரிகள் மீது இரக்கமற்ற வகையில் வாகனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கையர் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் படுகாயமடைந்திருந்தனர். இதன்போது இத்தாக்குதலை அரங்கேற்றிய 25 வயதுடைய அலெக் மினாஷியன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தற்போது உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுவரை ஜோர்தான் நாட்டவர் ஒருவர், தென் கொரியா நாட்டவர் இருவர், இலங்கையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.