காணாமல் போன மூன்று வயது சிறுவன் சடலமாக மீட்பு

ஒன்ராறியோ Belwood இன் Grand River பகுதியில் நேற்றுப் பிற்பகல் வேளையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீடடர் தொலைவி்ல் கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி காணாமல் போன மூன்று வயது சிறுவனை தேடும் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய நாள் ஒன்ராறியோ Belwood இன் Grand River பகுதியில் மீட்கப்பட்ட அந்த சடலம் காணாமல் போன சிறுவனுடையது என்பதை அவனின் தாயார் உறுதிப்படுத்தியதை அடுத்தே இந்த தேடுதல் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த அந்த பகுதியில் இருக்கும் பாலம் ஒன்றின் கீழ், சடலம் ஒன்று காணப்படுவதனை அவதானித்த மீனவர் ஒருவர் அதிகாரிகளுக்கு நேற்று பிற்பகல் 3 மணியளவில் தகவல் வழங்கியதை அடுத்து அது மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைகக்பபட்டுள்ளது.

குறித்த அந்த சடலம் இளவயது நபருடையது என்ற விபரத்தினை மட்டுமே நேற்றைய நாள் வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர், அதுகுறித்து மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.

இந்த சடலம் மீட்கப்பட்டதனை அடுத்து, குறித்த அந்த பாலத்தின் மீதான போக்குவரத்துகள் சில மணி நேரங்களுக்கு தடை செய்யப்பட்டதுடன், மரண விசாரணை அதிகாரியும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி காணாமல் போன மூன்று வயது சிறுவனின் தாயார் Michelle Hanson தமது முகநூல் பக்கத்தில், கடந்த இரண்டு மாதங்களாக தனது மகனைத் தேடி நடாத்தப்பட்ட நடவடிக்கைககள் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளர்.

தனது மகனின் இறுதிச் சடங்கிற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.