கனேடிய ஹொக்கி வீரர்கள் பயணித்த பேருந்து விபத்து : 14 பேர் பலி

ஐஸ் ஹொக்கி வீரர்கள் பயணித்த பேருந்து பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் குறித்த வாகனங்கள் சஸ்கச்சுவான் மாநிலத்தின் குரோன்லிட் எனப்படும் பகுதியில், நெடுஞ்சாலை 335 இல் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த போது இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

சாரதி உட்பட பேருந்தில் 28 பேர் பயணித்திருந்த நிலையில், அவர்களில் 14 பேர் உயிரிழந்து விட்டதாகவும், ஏனைய 14 பேரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டுள்ளனர் என்றும், அவர்களுள் 3 பேர் உயிராபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துத் தொடர்பில் தனது Twitter பக்கத்தில் பதிவிட்டுள்ள கனேடியப் பிரதமர், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றனர் என்பதை தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இதேவேளை இது மிகவும் கோரமான சம்பவம் எனவும், அந்த பேரூந்தில் பயணித்த சிறுவர்களின் பெற்றோர், தமது பிள்ளைகளின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக துடியாய் துடித்துக் கொண்டிருப்பதாகவும், குறித்த அந்த விளையாட்டுக் குழுவின் தலைவர் முனனதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் அந்த பேரூந்தில் பயணித்த சிறுவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் சாஸ்காச்சுவானின் நிபாவின் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஒன்றுகூடியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சம்பவ இடத்துக்கு நேற்று மூன்று அவசர மருத்துவ உலங்குவானூர்திகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு ஒரே தடவையில் ஒரே இடத்திற்கு மூன்று உலங்குவானூர்திகள் அனுப்பி வைக்கப்பட்டமை வழமைக்கு மாறான சம்பவம் என்று மருத்துவ உலங்குவானூர்திகள் சேவை நிறுவன அதிகாரியும் தெரிவித்துள்ளார்.