முகநூல் தரவுகள் கசிவு : 6,20,000 ற்கும் அதிகமான கனேடியர்கள் பாதிப்பு

Facebook சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பயனாளிகளின் தனிப்பட்ட தரவுகள் கசிந்துள்ள நிலையில், அதில் 6,20,000 ற்கும் அதிகமான கனேடியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இது தொடர்பில் முகநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பாக அரசியல் நடவடிக்கைகளுக்காக செயற்பட்ட நிறுவனம் ஒன்றுக்கு, குறித்த இந்த எண்ணிக்கையான கனேடியர்களின் தகவல்கள், முறையற்ற வகையில் பகிரப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 6,22,161 கனேடியர்களின் முகநூல் தரவுகள், முறையற்ற வகையில் கேம்பிரீட்ஜ் அனலிட்டிக்கா நிறுனத்திற்கு, செயலிகள் ஊடாக பகிரப்பட்டுள்ளதாக முகநூல் நிறுவனம் நேற்றைய நாள் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக சுமார் 87 மில்லியன் முகநூல் பாவனையாளர்களின் தரவுகள் கசிந்துள்ளதாகவும், அவற்றுள் அதிகளவாக 82 சதவீதமானவை அமெரிக்க முகநூல் பாவனையாளர்களுடையது எனவும் நம்பப்படுகிறது.