வரவு-செலவு திட்டம் வாக்குகளை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல: கத்தலின் வின்

ஒன்ராறியோ மாகாணத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், மக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்ல என ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ளார்.

ஆளும் லிபரல் அரசாங்கம் அண்மையில் 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்தது. இந்த வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி ஒன்ராறியோ மாகாண சட்டமன்றுக்கான பொதுத் தேர்தலை குறிவைத்தது முன்வைக்கப்பட்டதாக எதிர்கட்சிகளினால் பரவலாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதுகுறித்து ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் கூறுகையில், “தேர்தலுக்கு சிறிது காலம் முன்னதாக வருவதனால் இது வாக்குகளை எதிர்பார்த்து தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் அல்ல. தன்னால் ஏற்கனவே அடித்தளம் இடப்பட்டுள்ள திட்டங்களின் தொடர்சியாகவும், விரிவாக்கமுமாகவே இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வரவு செலவுத் திட்டம், எதிர்வரும் ஆறு ஆண்டுகளுக்கு பற்றாக்குறையை நீடிக்க வழிவகை செய்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வரவு செலவுத் திட்டம் ஒன்ராறியோ மக்களின் உண்மையான ஏக்கங்களுக்கு தீர்வு காணும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

தன்னை ஆட்சிக்கு கொண்டுவந்த மக்களின் மனங்களையும் தேவைகளையும் அடிப்படையாக வைத்தே இந்த வரவு செலவுத் திட்டம் வரையப்பட்டுள்ளது. அவை தமது அரசாங்கத்தினால் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்களின் தொடர்ச்சியே என்பதுடன், அவற்றுக்கான அடித்தளங்கள் ஏற்கனவே போடப்பட்டுள்ளன” என கூறினார்.