கனடா உலகில் மிக மகிழ்ச்சியான நாடு தரவரிசையில் 7ம் இடம்

கனடா உலகில் மிக மகிழ்ச்சியான நாடு தரவரிசையில் 7ம் இடத்தில் உள்ளது. உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்த வருடம் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த வருடம் நோர்வே முதலிடத்தில் திகழ்ந்தது. ஆனால், இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

வருடாந்த உலக மகிழ்ச்சி அறிக்கையிலேயே இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை, முன்னர் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் திகழ்ந்த டென்மார்க் தற்போது மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, சுவீடன், அவுஸ்ரேலியா ஆகியன முதல் 10 மகிழ்ச்சியான நாடுகளுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த வருடம் 14 ஆவது இடத்தில் இருந்த ஐக்கிய அமெரிக்கா 18 ஆவது இடத்திலும், ஐக்கிய இராஜ்ஜியம் 19 ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

வருடாந்த உலக மகிழ்ச்சி அறிக்கையை நிலையான வளர்ச்சித் தீர்வுகளுக்கான வலையமைப்பு (SDSN) இன்று பிற்பகல் வெளியிட்டது.

சர்வதேச அளவில் சமத்துவம் மற்றும் நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து இந்த மகிழ்ச்சியான நாடுகள் தரவரிசை வெளியிடப்படுகின்றது.

இதில் பெரும்பாலும், வட அமெரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளே முன்னணியில் இடம்பிடிக்கின்றன.

கவனிப்பு நிலைகள், வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், பெருந்தன்மை, நல்ல ஆட்சி, நேர்மை, சுகாதாரம் மற்றும் வருமானம் போன்றவற்றை கணக்கில் கொண்டே இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.

இம்முறை இவற்றுடன் கல்வி மற்றும் குடியேற்றம் ஆகியனவும் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமான உலகின் 156 நாடுகள் இந்தக் கணக்கெடுப்பில் உள்வாங்கப்பட்டு, புள்ளிகளிடப்பட்டு தரப்படுத்தப்பட்டுள்ளன.