பழமை வாதக்கட்சியின் தலைவர் தேர்தல் முடிவின் பின்னணி என்ன?

கடந்த சனிக்கிழமை [March 10, 2018] நடைபெற்ற ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாதக்கட்சியின் புதிய தலைவரை அறிவிப்பதற்கான கட்சியின் ஒன்றுகூடல் முடிவை அறிவிக்காமலே கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் முடிவிற்கு வந்தது. பின்னர் முழுமையான விபரங்;கள் அற்றே முடிவு ஒன்று அறிவிக்கப்பட்டது. எவ்வித அறிவிப்புமின்றி ஐந்தரை மணித்தியாலங்கள் தொடர்ந்த நேரலைகளில் பல விடயங்கள் வதந்திகளாகவே பேசப்பட்டன. பகிரப்பட்ட பல விடயங்கள் உண்மைக்கு புறம்பானவையாக அமைந்தன. சி.பி.சி ஆக இருக்கட்டும் சி.ரி.வியாக இருக்கட்டும். சிற்றி ரிவியாக இருக்கட்டும் ஆய்வாளர்கள் பலர் முரணான கருத்துக்களைளே பல வேளைகளில் முன் வைத்தனர். அவை மேலதிக கேள்விகளை எழுப்பினவே அன்றி தீர்வுகளாக அமையவில்லை. ஒரு ஊடகவியலனாக ஒரு ஆய்வாளனாக உங்கள் புரிதலுக்காக அதன் உண்மை விபரங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


முதலில் இந்த தலைவர் தேர்வின் பொறிமுறை என்ன?

ஒன்ராரியோவில் பாராளுமன்றத்திற்கென 108 பாராளுமன்ற தொகுதிகள் இருந்தன. மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போதெல்லாம் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். அதன் பிரகாரம் யூனில் வரும் ஒன்ராரியோ பாராளுமன்ற தேர்தல் முதல் தொகுதிகளின் எண்ணிக்கை 124 ஆக அதிகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சியும் தமது தலைவரை தெரிவு செய்வதற்கு வித்தியாசமான பொறிமுறையை கொண்டிருக்கின்றன. பழமைவாதக்கட்சியின் பொறிமுறை 124 தொகுதிகளுக்கும் 100 புள்ளிகளை சமத்துவமாக வழங்குவது. ஓரு தொகுதியில் எத்தனை வாக்காளர்கள் இருந்தாலும் 100 புள்ளிகளே கிடைக்கும்.

இதன் பிரகாரம் 124 தொகுதிகள் 100 புள்ளிகள் எனும் போது 12400 புள்ளிகள் தலைமைத்தேர்வில் மொத்தமாக உள்ளன. இதில் போட்டியிடுபவர்களில் யாரொருவர் 6201 புள்ளிகளை பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இங்கு மேலதிகமாக கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒரு விடயம் உண்டு. அதாவது ஒரு தொகுதியில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 100க்கு குறைவாக இருக்குமானால் 100 புள்ளிகள் அத் தொகுதிக்கு வழங்கப்படாது வழங்கப்பட்ட வாக்குகளுக்காக அதிகபட்சம் ஒரு வாக்கிற்கு ஒரு புள்ளி என்ற அடிப்படையிலேயே வழங்கப்படும்.

இந்த தலைமைத் தேர்விலும் மூன்று தொகுதிகளில் 100க்கு குறைவானவர்களே வாக்களித்தனர். அந்த தொகுதிகள் குறித்த விபரங்களை கீழே பார்க்கவும். மொத்தமாக மூன்று தொகுதிகளிலும் 151 பேரே (31 43 77) வாக்களித்ததால் கிடைக்கவேண்டிய 300 புள்ளிகளில் 149 புள்ளிகள் இழக்கப்பட்டன. ஆகவே இத்தேர்தலில் இறுதியில் 12251 புள்ளிகளே இருந்தன. வெற்றி பெறுபவர் 6126 புள்ளிகளை பெற வேண்டும்.

சரி டக் போட் வெற்றி பெற்றவராக எவ்வாறு தீர்மானிக்கப்பட்டார்?

நான்கு வேட்பாளர்கள் கிறிஸ்ரீன் எலியட் டக் போட் கரலைன் மல்ரூனி தானியா அலன் தலைமைத்துவத்திற்கு போட்டியிட்டனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகுதிகளிலும் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார அடிப்படையில் புள்ளிகளைப் பெறுவர். உதாரணமாக ஒரு தொகுதியில் அளிக்கப்பட்ட 200 வாக்குகளில் எலியட் 70 வாக்குகளைப் பெற்றால் 100 புள்ளிகளில் 35 புள்ளிகள் கிடைக்கும். போட் 60 வாக்குகளைப் பெற்றால் 30 புள்ளிகளும் 40 வாக்குகளைப் பெற்ற மல்ரூனிக்கு 20 புள்ளிகளும் 30 வாக்குகளுக்காக தானியா 15 புள்ளிகளையும் பெறுவார்.

இவ்வாறு தொகுதி ரீதியாக பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் பின்வருமாறு வாக்குவீதம் அமைந்தது.
எலியட் 34.1 சதவீதத்துடன் அதாவது மொத்தமாக உள்ள 12251 புள்ளிகளில் 4178 புள்ளிகளையும் போட் 33.4 சதவீதத்துடன் 4092 புள்ளிகளையும் மல்ரூனி 17.2 சதவீதத்துடன் 2107 புள்ளிகளையும் தானியா 15.3 சதவீதத்துடன் 1874 புள்ளிகளையும் பெற்றனர். முதல் சுற்றில் மல்ரூனி ஆறு தொகுதிகளிலும் தானியா வின்சரில் உள்ள இரண்டு தொகுதிகளிலுமே முதல் இடத்தில் வந்தனர். ஏனைய 116 தொகுதிகளிலும் எலியட் மற்றும் போட்டே முதலில் வந்தனர். எலியட் போட்டிலும் சற்று அதிகரித்த தொகுதிகளில் முன்னிலை பெற்றார்.

எதிர்பார்தவாறு யாரும் முதலாவது சுற்றில் வெற்றி பெறுவதற்கு தேவையான 6126 புள்ளிகளைப் பெறவில்லை. இந்நிலையில் முதல் சுற்றில் இறுதியாக வந்தவர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். தானியா இறுதியாக வந்ததால் அவர் நீக்கப்பட்டார். வாக்காளர்கள் வாக்களிக்கும் போது தமது முதல் தெரிவு மற்றும் இரண்டாவது தெரிவையும் குறிப்பிடலாம். இதன் பிரகாரம் தானியாவிற்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் அவர் தவிர யாரும் இரண்டாவது தெரிவில் குறிப்பிடப்படவில்லையாயின் அவ் வாக்குகள் முதலில் கணிப்பில் இருந்து நீக்கப்படும். இரண்டாவது தெரிவு குறிப்பிடப்பட்டவர் அடிப்படையில் அவர் பெற்ற 15.3 சதவீதம் தொகுதிகள் அடிப்படையில் ஏனைய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

தானியா வெளிப்படையாகவே போட்டை ஆதரித்ததால் அவர் வாக்குகளில் 83 சதவீதமானோர் போட்டை தமது இரண்டாவது தெரிவாக வாக்களித்திருந்தனர். இதன் பிரகாரம் தானியாவின் 15.3 சதவீத்தில் 12.7 சதவீதத்தையும் 1555 மேலதிக புள்ளிகளையும் போட் பெற்றாh. தானியாவின் வாக்குகளில் 11 சதவீதத்தை இரண்டாவது தெரிவாக பெற்று 1.68 சதவீதத்தையும் 206 புள்ளிகளை மேலதிகமாகவும் எலியட் பெற்றார். தானியாவின் வாக்குகளில் 6 சதவீதத்தை இரண்டாவது தெரிவாக பெற்று 0.92 சதவீதத்தையும் 113 புள்ளிகளை மேலதிகமாகவும் மல்ரூனி பெற்றார்.

இதன் பிரகாரம் இரண்டாவது சுற்றின் முடிவில் போட் 46.1 சதவீதத்துடனும் 5647 புள்ளிகளுடனும் முன்னணிக்கு வந்தார். இரண்டாவது இடத்தில் 35.78 சதவீதத்துடனும் 4384 புள்ளிகளையும் எலிபட் பெற்றார். மூன்றாவதாக 18.12 சதவீதத்துடனும் 2220 புள்ளிகளுடனும் மல்ரூனி மூன்றாவது இடத்தில் இருந்தார்.

இரண்டாவது சுற்றின் முடிவிலும் யாரும் வேண்டிய 6126 புள்ளிகளைப் பெறாததால் தற்போது மூன்றாவது இடத்தில் இருந்த மல்ரூனி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது மிகவும் பின் தங்கியிருந்த எலியட் மல்ரூனியில் பெருவாரியான இரண்டாவது தெரிவில் தங்கியிருந்தார். தற்போதும் வழமைபோல் இரண்டாவது தெரிவை குறிப்பிடாத மற்றும் போட்டியில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்ட தானியாவிற்கு அளிக்கப்பட்ட மல்ரூனியின் வாக்குகள் அகற்றப்பட்டு போட் மற்றும் எலியட்டுக்கு இரண்டாவது தெரிவை வெளிப்படுத்தியிருந்த மல்ரூனியின் வாக்குகளின் அடிப்படையில் தொகுதி ரீதியாக மல்ரூனியின் 18.12 சதவீதம் போட்டுக்கும் எலியட்டுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன.

மல்ருனியின் 18.12 வாக்குகளில் 75 சதவீதம் எலியட்டுக்கு கிடைத்தது. இதன் பிரகாரம் 18.12 சதவீத்தில் 13.59 சதவீதத்தையும் 1665 புள்ளிகளையும் எலியட் மல்ரூனியிடம் இருந்து பெற்றார். போட் மல்ரூனியின் 25 சதவீத வாக்குகளை இரண்டாவது தெரிவாக பெற்று 18.12 சதவீத்தில் 4.53 சதவீதத்தையும் 555 புள்ளிகளையும் மல்ரூனியிடம் இருந்து பெற்றார். மூன்றாவது சுற்றின் முடிவில் 50.63 சதவீதத்துடனும் 6202 புள்ளிகளையும் பெற்று வெற்றி இலக்கை தொட்டார் போட். 49.37 சதவீதத்துடன் 6049 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் வந்தார் எலியட். மல்ரூனியின் இரண்டாவது தெரிவில் 76.7 சதவீதத்தை பெற்றிருந்தால் வெற்றி இலக்கை எலியட் எட்டியிருப்பார்.

மூன்றாவது சுற்றின் முடிவில் 124 தொகுதிகளில் 64 தொகுதிகளில் முன்னணியில் இருந்தார் எலியட். 60 தொகுதிகளிலேயே போட் முன்னணியில் வந்தார். முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றின் அடிப்படையில் பெற்ற வாக்குகளின் பிரகாரம் 32202 வாக்குகளை அதாவது அளிக்கப்பட்ட வாக்குகளில் 51.7 சதவீத வாக்குகளை எலியட் பெற்றார். 30041 வாக்குகளை 48.3 சதவீதத்தையே போட் பெற்றார். இதனால் தான் அமெரிக்க சனாதிபதி தேர்தலுடனான சில ஒப்பு நோக்குகள் சில விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கும் இந்த பொறிமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. போட் வெற்றி பெற்ற சில தொகுதிகளில் பெருவாரியான வெற்றிகளைப் பெற்றதே அவர் வெற்றிக்கான காரணமாக அமைந்தது. அவ்வாறு 11 தொகுதிகளில் அவர் வெற்றி அமைந்தது அனைத்தும் ரொரன்ரோ பெரும்பாகத்திலேயே அமைந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டின் கோட்டையான ஸ்காபுரோ மற்றும் எட்ரோபிக்கோவில் பெரு வெற்றி பெற்றார். ரொரன்ரோ நகரில் மிகவும் பின்தங்கினார். அதே போன்று வின்சர் நீங்கலாக பெரு நகரங்களில் மிகவும் பின்தங்கினார். ரொரன்ரோ பெரும்பாகம் நயகரா கமில்டன் பகுதியினூடான வின்சர் வரையிலான பகுதியே அவர் வெற்றியை உறுதி செய்தது.

கீழே உங்கள் பார்வைக்காக உங்கள் ஆர்வத்தை தூண்டக்கூடிய சில தொகுதிகளில் மூன்றாவது சுற்றின் முடிவில் ஏனையவ்hகளிடம் இருந்து இரண்டாவது தெரிவினூடாக பெற்ற வாக்குகளையும் கருத்தில் கொண்டு எலியட் மற்றும் போட் பெற்ற வாக்குகளின் விபரம் வருமாறு

Riding Elliott Ford

Scarborough
Scarborough Rouge Park 191 (44.836) 235 (55.164)
Scarborough Centre 149 (40.27) 221 (59.73)
Scarborough North 40 (18.672) 174 (81.308)
Scarborough Guildwood 116 (32.222) 244 (67.778)
Scarborough Agincourt 94 (25.967) 268 (74.033)
Scarborough Southwest 137 (42.415) 186 (57.585)

Etobicoke
Etobicoke North 64 (13.588) 407 (86.412)
Etobicoke Centre 322 (34.328) 616 (65.672)
Etobicoke Lakeshore 430 (52.956) 382 (47.004)

Toronto City and surrounding ridings
Parkdale Highpark 295 (58.3) 211 (41.7)
Spadina Fort York 340 (67.729) 162 (32.271)
University Rosedale 732 (81.424) 167 (18.576)
Toronto St. Pauls 605 (77.465) 164.048)76 (22.535)
Toronto Danforth 212 (64.048) 119 (35.952)
Donvally West 939 (73.879) 332 (26.121)
Beaches East York 292 (59.959) 195 (40.041)

Durham
Pickering Uxbridge 303 (54.693) 251 (45.307)
Ajax 284 (55.361) 229 (44.639)
Whitby 858 (79.151) 226 (20.849)
Durham 748 (63.336) 433 (36.664)

York
Markham Thornhill 167 (56.04) 131 (43.96)
Markham Stouffville 291 (45.116) 344 (54.884)
Markham Unionville 197 (24.502) 607 (75.498)

Peel
Brampton Centre 96 (42.748) 130 (57.252)
Brampton South 218 (59.079) 151 (40.921)
Brampton North 131 (44.407) 164 (55.593)
Brampton West 183 (56.832) 139 (43.168)
Mississauga Malton 272 (50.652) 265 (49.348)
Mississauga Streetville 156 (34.667) 294 (65.333)
Mississauga Erinmills 155 (29.58) 369 (70.42)
Mississauga East Cooksville 91 (24.661) 278 (75.339)
Mississauga Lakeshore 491 (59.014) 341 (40.986)

Halton
Oakville 666 (61.157) 423 (38.843)
Oakville North Burlington 440 (54.795) 363 (45.205)
Burlington 365 (55.896) 288 (44.104)

Caroline riding
York Simcoe E – 178 (44.389) F – 223 (55.611)

Ottawa
Ottawa Centre E- 343 (62.025) F- 210 (37.975)
Ottawa South 283 (54.633) 235 (45.367)
Nepean 310 (52.721) 278 (47.279)
Orleans 267 (47.849) 291 (52.151)
Carleton 511 (50.644) 498 (49.356)
Kanata Carleton 495 (56.571) 380 (43.429)

Northern riding with less than 100 votes
Timmins E – 49 F – 28
Kiiwetinoong 14 17
Mushkegowuk–James Bay 28 15

 

by: Nehru Gunaratnam