வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு : கனடாவின் பெருளாதாரத்தில் தாக்கம்

NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு நீக்கப்படுமானால் கனடாவின் பொருளாதாரம் 0.5 சதவீத வீழ்ச்சியைக் காணும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுக்களில் சம்பந்தப்பட்ட நாடுகளான அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகியவை ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஒப்பந்தத்தை மீள மாற்றியமைப்பது குறித்த பேச்சுக்கள், எதிர்வரும் கிழமைகளில் எட்டாவது சுற்றினை எட்டவுள்ளது.

இந்த நிலையில் NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு செயலிழக்குமாக இருந்தால், கனடாவின் பொருளாதாரம் 0.5 சதவீத வீழ்ச்சியைக் காணும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தெரிவித்துள்ள கனடாவின் சிந்தனையாளர் சபை, ஏறக்குறைய 85,000 பேர் ஒரு ஆண்டுக்குள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளது.

அத்துடன் NAFTA ஒப்பந்தத்தில் ஏற்படககூடிய மாற்றங்கள், கனடாவின் பொருளாதாரத்தில் சில தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என்ற போதிலும், புதிதாக அமெரிககாவின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் வரியற்ற வியாபாரங்கள் என்பற்றுக்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன எனவும் அது தெரிவித்துள்ளது.

அந்த வகையில் NAFTA ஒப்பந்தம் செயலிழக்குமாக இருந்தால், கனடாவின் ஏற்றுமதிகளில் 8.9 பில்லியன் வீழ்ச்சி ஏற்படும் எனவு்ம், இது ஆண்டுக்கு 1.8 சதவீத வீழ்ச்சி எனவும், அதிக பட்சமாக வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் ஏற்றுமதியில் 6 பில்லியன் டொலர்கள் வீழச்சியடையும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் கனடாவில் ஏற்படக்கூடிய பணவீக்க அதிகரிப்பு மற்றும் கனேடிய டொலரின் பெறுமதி வீழச்சி என்பன, அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கான இறக்குமதியின் பெறுமதியையும் அதிகரிக்க செய்யும் எனவும் அது விபரித்துள்ளது.

அதிகரித்த இறக்குமதி விலைகள், அதனால் ஏற்படும் உள்ளூர் நுகர்வின் அளவு வீழ்ச்சி, ஏற்றுமதியில் ஏற்படக்கூடிய தாக்கம் என்பன, முதல் ஆண்டில் கனடாவின் வியாபாரத்தில் 3.3 பில்லியன் டொலர்கள் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.