பரப்புரை நடவடிக்கையை தொடங்கியுள்ள பற்றிக் பிரவுன்

ஒன்ராறியோ பழமைவாதக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகி, பின்னர் மீண்டும் அதே தலைமைத்துவத்திற்கான போட்டியில் குறித்துள்ள பற்றிக் பிரவுன், மிசிசாகாவில் தனது பரப்புரை நடவடிக்கையை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், இந்த கட்சியை என்றும் இல்லாத அளவு உயர்ந்த நிலைக்கு வளர்த்தெடுத்தவர் என்ற அடிப்படையில், தானே கட்சிக்கு தலைமை தாங்குபவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனவரி மாதத்தில் பற்றிக் பிரவுனால் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை இரண்டு இலட்சத்திற்கும் அதிகம் என்று கூறப்பட்ட போதிலும், உண்மையான எண்ணிக்கை அதனை விடவும் சுமார் 67,000 குறைவானதே என்று கட்சியின் இடைக்காலத் தலைவர் விக் ஃபெடெலி அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும் அந்த எண்ணிக்கைகள் முக்கியமில்லை எனவும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது பழமைவாதக் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையானது 12,000த்தில் இருந்து 1,45,000 – 1,80,000 – 2,00,000 என்று அதிகரித்துச் சென்றுள்ளது எனவும், கட்சி இத்தனை காலமும் காணாத அளவு உறுப்பினர்கள் எண்ணிக்கை அது என்றும் அவர் விபரித்துள்ளார்.

இதேவேளை உறுப்பினர் உரிமை ஒவ்வொரு மாதமும் காலாவதியாகும் நிலையில், ஒட்டுமொத்த எண்ணிக்கையில் மாற்றங்கள் காணப்படுவது இயல்பானதே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் தனது தலைமைத்துவமே ஒன்ராறியோ மக்களின் நிலையினை மேம்படுத்தும் எனவும், எதிர்வரும் யூன் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் கத்தலின் வின் தலைமையிலான லிபரல் அரசினை தமது தலைமையில் பழமைவாதக் கட்சி வெற்றிகொள்ளும் என்றும் பற்றிக் பிரவுன் நம்பிக்கை வெளியிட்டு்ளளார்.

ஒன்ராறியோ பழமைவாதக் கட்சியின் தலைமைப் பதவியை வகித்து வந்த பற்றிக் பிறவுன் பாலியல் நடத்தைக் குற்றச்சாட்டு ஒன்றினை அடு்தது கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தன்மீதான அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து நிராகரித்து வந்ததுடன், கட்சித் தலைவருக்கான போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளார்.