தாஜ்மஹாலில் பிரதமர் குடும்பத்தினர்

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் அவரது குடும்பத்தாரும் இன்று ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலைப் பார்வையிட்டுள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் புது டெல்லியில் இருந்து ஆக்ரா நோக்கி வானூர்தி மூலம் புறப்பட்டுச் சென்ற அவர்கள், முற்பகல் 10.45 அளவில் தாஜ் மஹாலையும் அதன் சூழலையும் பார்வையிட்டுள்ளார்.

அதேவேளை இந்திய நேரப்படி இன்று மாலை டெல்லியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முக்கிய சந்திப்பு ஒன்றில் கனேடியப் பிரதமர் கலந்து கொள்கிறார்.

7 நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள கனேடியப் பிரதமர் எதிர்வரம் 25ஆம் நாள் வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், எதிர்வரும் 23ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சு நடாத்தவுள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் இந்த இந்தியப் பயணத்தில் அவருடன், கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், அறிவியல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் நவ்டீப் பைன்ஸ், பாதுகாப்ப அமைச்சர் ஹர்ஜித் சஜான், விளையாட்டுத் துறை அமைச்சர் கிறிஸ்டி டுன்கான், உட்கட்டுமானத்துறை அமைச்சர் அமர்ஜீத் சோஹி உள்ளிட்டோரும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவினை வலுப்படுத்தும் நோக்குடன் இந்த பயணத்தினை பிரதமர் ரூடோ மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தில் பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் கூட்டு ஒத்துளைப்பு, பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட விடயங்களில் கனேடியப் பிரதமர் அதிக கவனம் செலுத்தவுள்ளார்.

அத்துடன் குடிசார் பொதுப் பாவனைக்கு அணுசக்தியை பயன்படுத்திக் கொள்வது மற்றும் அதனை மேம்படுத்திக் கொள்வது குறித்த விடயங்களிலும் இரண்டு நாடுகளும் தமக்கிடையேயான ஒத்துளைப்புகளை வலுப்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.