அட்லான்டிக் கனடாவை தாக்கும் பனிப்புயல்!

அட்லான்டிக் கனடாவை இன்று மிக மோசமான பனிப்புயல் தாக்கவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அனைத்து பாகங்களிலும் பனியுடன் கூடிய காற்று மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும், சில வேளைகளில் அது மணிக்கு 140 கிலோமீட்டர் வரையில் செல்லக்கூடிய வாய்புகளும் உள்ளதாகவும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பனிச் சூறாவளி என்று கூறப்படும் இந்த பனிப்புயல் அமெரிக்காவின் கிழக்கு பிராந்தியத்தில் இருந்து இன்று கனடாவை வந்தடைவதாகவும், இதனால் கனடாவின் அட்லான்டிக் பிராந்திய மாநிலங்களில் 40 சென்ரிமீட்டர் வரையில் பனிப்பொழிவினை எதிர்பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அத்துடன் அந்தப் பிராந்யதிங்களில் இன்று மழை மற்றும் உறை மழைக்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதாகவும், கடற்கரைப் பிராந்தியங்களை வேகமான சூறைக் காற்றும், உயரமான அலைகளும் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகும் இந்த பனிப்புயல் நாளை வரை தொடரக்கூடும் எனவும், இதன்போது வீசக்கூடிய 140 கிலோமீட்டர் வேகமான காற்று பலத்த சேதங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், குறிப்பாக மின்வினியோகம் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நோவா ஸ்கொட்ஷியா மாநிலகம் கடந்த வாரமும் பனிப்புயலாளர் பாதிப்புகளை எதிர்கொண்டிருந்த நிலையில், இன்று ஏற்படவுள்ள பாதிப்புகள் அதனைவிடவும் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் மின் தடை இந்த வார இறுதி வரை நீடிக்கக்கூடும் எனவும், சிலவேளைகளில் அடுத்த வாரம் வரையிலும் தொடரக்கூடும் எனவும் நோவா ஸ்கொட்ஷியா மின்சார வாரியம் தெரிவித்து்ளளது.

குறைந்தது 72 மணி நேரங்களுக்கு தேவையான அநத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்குமாறும், குறிப்பாக அவசர உதவிப் பொருட்கள், உணவு, நீர், மின்கலம், மின்கலத்தில் இயங்கும் வானொலி, முதலுதவிப் பொருட்கள், குழந்தைகளுக்கான உணவுகள், உடல்நலக்குறைவை எதிர்நோக்குவோருக்கான மருந்துப் பொருட்கள் என்பற்றை தயார்படுத்திக் கொள்ளுமாறும் நியூ பிரவுன்ஸ்விக் மக்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.