மொன்றியலில் நடப்புக்கு வந்தது பொலித்தீன் பாவனைக்கான தடை

பொலித்தீன் பைகளின் பாவனைக்கான தடை நேற்றைய நாளிலிருந்து மொன்றியல் நகரில் நடப்புக்கு வருகிறது.


பொலித்தீன் பொருட்களுக்கு தடை விதிக்கும் இந்த திட்டம் நீண்டகாலமாகவே பேசப்பட்டுவந்த நிலையில், கனடாவில் இவ்வாறான தடையை நடைமுறைப்படுத்தும் முதல் பெருநகரமாக மொன்றியல் நேற்று திங்கட்கிழமையிலிருந்து இந்த தடையினை அறிமுகப்படுத்தியுள்ளது.

நகர் முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தடை உத்தரவின்படி, 50 மைக்ரோன்ஸ்க்கு குறைவான தடிப்பினை உடைய அனைத்துவிதமான பிளாஸ்டிக் பைகளையும் வினியோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பிளாஸ்டின் பொருட்கள் மண்ணில் சிதைவடைந்து மக்கிப் போவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கும் என்பதுடன், ஆங்காங்கே கைவிடப்படும் இவ்வாறான பொலித்தீன் பைகளால் பிராந்திய சுகதாரமும், கடற்கரைகளின் இயற்கைவளமும் அழிவைச் சந்தித்து வருவதாகவும் மொன்றியல் நகர அதிகாரிக்ள சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆண்டுதோறும் இவ்வாறான பொலித்தீன் பைகள் சுமார் 2 பில்லியன்கள் என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், அவற்றுள் வெறும் 14 சதவீதம் மட்டுமே மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர்கள் விபரம் வெளியிட்டுள்ளனர்.

மொன்றியலின் முன்னாள் நகரபிதாவினால் கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதுடன், ஓகஸ்ட் மாதத்தில் நகரசபையால் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு வர்த்தகர்களுக்கு போதிய கால அவசாசம் வழங்கப்பட்டது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை இதனை முற்று முழுதாக நடைமுறைக்கு கொண்டுவருவதற்காக வர்த்தகர்களுக்கு மேலும் 6 மாதகால அவகாசம் வழங்கப்படுவதாகவும், யூன் மாதம் 5ஆம் நாளுக்கு பின்னர் இவ்வாறான பொலித்தீன் பைகள் பயன்படுத்தப்பட்டால், முதல் தடவையாக பயன்படுத்தும் தனி நபருக்கு ஆயிரம் டொலர்கள் அபராதமும், நிறுவனத்திற்கு இரண்டாயிரம் டொலர்கள் அபராதமும் விதிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறான ஒற்றை  பாவனைப் பொருட்களின் உபயோகங்களைக் குறைத்துக் கொண்டு, பலமுறை உபயோகிக்கக்கூடிய பொருட்களை உபயோகிக்கும் பழக்கத்தினை மக்கள் மத்தியில் மீண்டும் ஏற்படுத்துவதை நோக்காகக் கெர்ணடும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர்கள் விபரித்துள்ளனர்.