கனடாவுக்கு ஈரான் கண்டனம்

ஈரானில் அந்த நாட்டு அரசுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்டுவரும் மக்கள் போராட்டம் குறித்து கனடா வெளியிட்டிருந்த கருத்துக்கு, ஈரான் அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.


கனடாவின் இந்த நடவடிக்கையானது, தமது நாட்டில் இடம்பெறும் விவகாரத்தில் தேவையின்றி தலையீடு செய்யும் ஒரு போக்கினை காட்டுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கனடாவின் இவ்வாறான செயற்பாடானது, அனைத்துலக நியமங்களை மீறும் நடவடிக்கையாக காணப்படுவதாகவும், எந்தவித நீதி முறைமைகளையும் பெறுமதியற்றதாக ஆக்குவதாகவும் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்த சில நாட்களாக ஈரானின் சில நகரங்களில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள், பேரணிகள் தீவிரம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவீன அதிகரிப்பு மற்றும் வேலையற்றோர் பிரச்சினை உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளை முன்னிறுத்தி ஆரம்பமாக போராட்டங்கள், அந்த நாட்டின் தற்போதய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களாக மாறி வருகின்ற நிலையில், அதனை ஒடுக்கும் நடவடிக்கைகளை ஈரான் அரசு மேற்கொண்டு வருகிறது.

மக்களின் அமைதிவழியிலான சனநாயக போராட்டங்களை ஈரான் அரசு இவ்வாறு ஒடுக்கும் செயற்பாடுகளை கண்டித்த கனேடிய வெளியுறவுத்துறை, மக்களின் அமைதி வழியிலான போராட்டங்களுக்க தனது ஆதரவினையும் வெளிப்படுத்தியிருந்தது.

ஈரானில் இடம்பெறும் நடவடி்ககைகளை தாம் அணுக்கமாக கண்காணித்து வருவதாகவும், ஈரான் அதிகாரிகள் சனநாயகத்தினையும் மனித உரிமைகளையும் மதித்து நடக்க வேண்டும் எனவும் கனடா வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஈரானிய மக்கள் தமது அடிப்படை உரிமைகளை வெளிக்காட்டும் வகையில் அமைதியான போராட்டங்களை முன்னெடுப்பதனை கனடா வரவேற்பதாகவும், அந்த மக்களின் சனநாயக் மற்றும் மனித உரிமைகளை ஈரானிய அதிகாரிகள் மதிக்க வேண்டும் எனவும் கனேடிய வெளியுறவுத்துறை கனேடிய வெளியுறவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் கனடா ஈரானிய மக்களின் கருத்து வெளியிடும் உரிமை உட்பட அனைத்து அடிப்படை உரிமைளுக்கும் மதிப்பளித்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே கனடாவின் இந்த நிலைப்பாடு தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சு, கனடாவின் இந்த நடவடிக்கையானது ஈரானுடன் கனடா தமது இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கான முனைப்புகளை வெளிப்படுத்துவதாக இல்லை என்று குறிப்பி்ட்டு்ளளது.