அமெரிக்க இராஜாங்க செயலாளர் இன்று கனடா வருகிறார்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் றெக்ஸ் டில்லர்சன் தனது முதலாவது அதிகாரத்துவப் பயணமாக இன்று கனடாவுக்கு வருகை தரவுள்ளார்.


இநதப் பயணத்தின் போது ஒட்டாவில் கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்டைச் சந்திக்கவுள்ள அவர், அதனைத் தொடர்ந்து கனேடிய அமெரிக்க உறவுகள் தொடர்பிலான கனேடிய அரசாங்கத்தின் அமைச்சரவைக் குழுவின் உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் இந்த கனேடிய பயணமானது, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீடித்துவரும் நட்புறவின் ஒரு வெளிப்பாடாகவே இடம்பெறுகின்றது என்ற அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த பயணத்தின் போது, பிராந்திய மற்றும அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கனடாவும் அமெரிக்காவும் இணைந்து அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் கனடாவில் வடகொரிய பிரச்சினை தொடர்பிலான மாநாடு ஒன்றினை நடாத்தவுள்ள நிலையில், றெக்ஸ் டில்லர்சனின் இநத் கனேடிய பயணத்தின் போது குறிப்பாக வடகொரிய விவகாரமும் விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இவை தவிர வட அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பு, NAFTA பேச்சுக்கள், உக்ரெய்ன்-ரஷ்யா நிலவரம், வெனிசுவேலா அரசியல் விவகாரம் உள்ளிட்ட வேறு பல விடயங்களும் அமெரிக்க இராஜாங்கச் செயலரின் இந்த கனேடிய பயணத்தின் போது விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.