வன்கூவரில் வீட்டு விலை மற்றும் வாடகை அதிகரிப்பால் முதியவர்கள் பாதிப்பு

வன்கூவரில் ஏற்பட்டுள்ள வீட்டு விலை அதிகரிப்பும், வாடகை அதிகரிப்பும், அதற்கு கட்டுப்படியாகாத பல முதியவர்களை வீதிகளுக்கு தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதிகரித்துள்ள வீட்டு வாடகையை செலுத்த வசதியற்ற பல முதியவர்கள், தங்க வீடுகள் அற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பலரும் ஒன்றாக சேர்ந்த தற்காலிக தங்குமிடங்களிலும், வாகனங்களிலும், வீதிகளிலும் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக வருமானம் அற்ற அல்லது குறைந்த வருமானம் ஈட்டும் முதியவர்கள், இவ்வாறு வீடுகளை விட்டு வெளியேறும் நிலை அதிகரித்து வருவதாக, முதியோர்களுக்கான உதவித் திட்டங்களில் பணியாற்றிவரும் தன்னார்வத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு வீடுகளை விட்டு வெளியேறும் முதியவர்கள் பலரும், வாகனங்களிலும், வீதகளிலும் இரவுப் பொழுதை கழிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக, 411 முதியோர் நிலையங்களின் கூட்டமைப்பு ஒன்றின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வீடுகள் இன்றி வீதிகளில் தங்கும் நிலைமை இளம் வயதினருக்கும் ஏற்படுகின்ற போதிலும், அவர்களால் இவ்வாறான நிலைமையினை ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ள முடியும் எனவும், ஆனால் உடல்நிலை தளர்ந்துபோயுள்ள முதியவர்களால் அதனை அவ்வாறு தாங்கிக் கொள்வது கடினம் என்பதையும் அவர்க்ள சுட்டிக்காட்டியுள்ளனர்.

வன்கூவரில் அனைவருக்கும் பொதுவாக ஏற்பட்டுள்ள வீட்டு விலை மற்றும் வாடகை அதிகரிப்பு, சம அளவிலேயே முதியவர்களையும் பாதிக்கின்றது என்ற போதிலும், மிக் குறைந்த வருமானத்தினை ஈட்டிவரும் முதியவர்களால், அதிகரித்துவரும் தமது மருத்துவ செலவீனங்களையும் கவனித்துக்கொண்டு வீட்டுக்கும் செலவிடமுடியானத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் விபரித்துள்ளனர்.