கோடீஸ்வரரும் மனைவியும் கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர்

ரொரன்ரோவின் பிரபல கோடீஸ்வரரும், நன்கொடையாளரும் மருந்து பொருள் வர்த்தகருமான பர்ரி ஷேர்மனும்அவருடைய மனைவியும் கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.


Apotex நிறுவனத்தின் நிறுவுனரும் தலைவருமான பர்ரி ஷேர்மனும் அவரது மனைவியும் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் வேளையில், நெடுஞ்சாலை 401 மற்றும் பே வியூ அவனியூ பகுதியில், Old Colony வீதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.

அதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்டுவந்த அதிகாரிகள், குறித்த அந்த இருவரும் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், உடனடி மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரது சடலங்கள் மீது உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றுமுன் தினமும், நேற்றைய நாளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த உடற்கூற்று பரிசோதனை முடிவுகள் தொடர்பில் நேற்று இரவு தகவல் வெளியிட்ட ரொரன்ரோ காவல்துறையினர், இருவருமே கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மனித கொலைகள் தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும், இவர்கள் இருவரதும் மரணம் தொடர்ந்தும் சந்தேகத்திற்கிடமானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் நேற்று தகவல் வெளியிட்டுள்ளனர்.