சித்திரவதைகளுக்கு காரணமாகும் தகவல்களை பகிர்ந்து கொள்ள தடை

சித்திரவதைகளுக்கு காரணமாகும் தகவல்களை பகிர்ந்து கொள்வதனைத் தடை செய்வதாக கனடா அறிவித்துள்ளது.

குறிப்பாக கனேடிய இராணுவம், பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலத்திரனியல் உளவு அமைப்புகள் இவ்வாறான தகல்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது இதன் மூலம் தடை செய்யப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள கனேடிய மத்திய அரசாங்கம், ஏனைய நாடுகளில் சித்திரவதைகளுக்கு பயன்படக்கூடிய, அல்லது துன்புறுத்தல்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய தகவல்களை, அவ்வாறான நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதனை தவிர்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெளிநாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள் காரணமாக, வெளிநாட்டு சிறைச்சாலைகளில் பலர் சித்திரவதைகளை எதிர்கொள்ள நேரிட்டதாக கனடா மீது குற்றச்சாட்டுகள் முன்னர் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் முற்பகுதியிலும், தாம் சிரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சித்திரதைகளுக்கு உள்ளானதாக, கனேடியர்கள் மூவர் அரசாங்கம் மீது அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், அரசாங்கம் அதற்காக மன்னிப்பு கோரியிருந்தது.

இவ்வாறான நிலையில் இந்த தடை உத்தரவினை வெளியிட்டுள்ள பாதுகர்பபு அமைச்சர் ஹர்ஜித் சஜான், துன்புறுத்தல்களுக்கு வழிவகுக்கக்கூடிய தகவல்களை வெளியிடுதல் அல்லது பெற்றுக் கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகளில், கனடாவின் தேசிய பாதுகாப்பு திணைக்களம், கனேடிய இராணுவம் மற்றும் கனேடிய தொடர்பாடல் பாதுகாப்பு நிறுவனம் ஆகியன ஈடுபடுவதனை தடை செய்வதாக தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி மனித உயிர்களை பாதுகாக்கவேண்டி அவசியம் தவிர்த்து, ஏனைய சந்தர்ப்பங்களில் சித்திரவதைகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை பெற்றுக் கொள்வதற்கும் தடை விதிக்கப்படுவதாக அவர் விபரித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதத்தில் கனேடிய காவல்துறை, கனேடிய எல்லை பாதுகாப்பு துறை மற்றும் கனேடிய உளவுத் துறை ஆகியவற்றுக்கும் இதே போன்றதொரு தடை உத்தரவை அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.