கனடாவையும் தாக்கக்கூடும் என்று அஞ்சப்படும் மர்ம நோய்

தென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு்ளள மர்ம நோய் ஒன்று விரைவில் கனடாவையும் தாக்கக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


தென் அமெரிக்க ஒட்டுண்ணிகளால் ஏற்படும் இந்த அபாயகரமான நோய், ஏற்கனவே மூன்று கனேடியர்களுக்கு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே, கனேடிய மருத்துவ சமூகம் இவ்வாறான கவலையினை வெளியிட்டுள்ளது.

இவ்வாறான நிலை தொடருமானால், உலகிலேயே மிகவும் ஆபத்தான இந்த ஒட்டுண்ணி நோய், எதிர்வரும் காலங்களில் ஆயிரக்கணக்கான கனேடியர்களை தாக்கக்கூடும் என்று அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி, தற்போதும் குறித்த இந்த தொற்றுக்கு ஆளானவர்கள் ஆயிரக் கணக்கில் இருக்கக்கூடும் எனவும், அவர்களுக்கு அந்த தொற்று ஏற்பட்டுள்ளது இதுவரை தெரியாதிருக்க கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான தொற்றுகள் இரத்தத்தின் மூலம் பரவும் தன்மையைக் கொண்டுள்ளதாகவும், இரத்த மாற்று சம்பவங்கள் மூலம், மற்றும் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான தாய்க்கு பிறக்கும் குழந்தைக்கு இந்த கிருமி தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் விபரித்துள்ளனர்.

சாகஸ்(Chagas) என்பபடும் குறித்த இந்த இரத்த ஒட்டுண்ணி தொற்று காரணமாக தென் அமெரிக்காவில் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் பேர் வரையில் பலியாவதாகவும், 21 நாடுகளில் சுமார் ஏழு மில்லியன் பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொற்று ஏற்பட்டவர்களுக்கு இதய தசை நார்கள் பலவீனமடைந்து, படிப்படியாக இருதய செயலிழப்பு ஏற்படக்கூடும் எனவும், சிலருக்கு உடனடிய இறப்பு ஏற்படுவதற்கான சாத்தியமும் உள்ளதாகவும் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக இந்த நோயின் தாக்கம் உள்ள நாடுகளில், கடந்த 2009ஆம் ஆண்டுக்கும் 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இரத்த மாற்று மேற்கொண்டோர், அல்லது இந்த நோயின் தாக்கம் உள்ள நாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த இரத்த ஒட்டுண்ணியின் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படக்கூடும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களை எதிர்கொண்டவர்கள், தம்மை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.