25 பேருடன் பயணித்த விமானம் வடக்கு சாஸ்காச்சுவானின் விபத்து!

25 பேருடன் பயணித்த விமானம் ஒன்று சாஸ்காச்சுவானின் வட பிராந்தியத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கனேடிய மத்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அங்குள்ள ஃபொன்ட் டூ லக் (FOND DU LAC) விமான நிலையத்தில் இருந்து நேற்று புதன் மாலை 6.15 அளவில் புறப்பட்ட அந்த விமானம், ஓடுபாதையில் இருந்து மேலழுந்து சிறிது நேரத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த விமானம் வீழ்ந்துள்ளதாகவும், ஆரம்பகட்ட தகவல்களின்படி விபத்தில் எந்தவித வெடிப்போ அல்லது தீயோ ஏற்படவில்லை எனவும் , அதிலிருந்தோர் காயமடைந்துள்ள போதிலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அந்த விமானத்தில் இருந்த ஒரு குழந்தை உட்பட 22 பயணிகள் மற்றும் மூன்று விமான சிப்பந்திகள் மருத்து கவனிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாஸ்காச்சுவானின் வட பிராந்தியத்தில், அதபாஸ்கா ஏரிக்கு கிழக்கே, தொலை தூரத்தில் குறித்த இந்த ஃபொன்ட் டூ லக் விமான நிலையம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.