டொரோண்டோ மல்வேர்ன் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்

டொரோண்டோ மல்வேர்ன் பகுதியில் இன்று அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மோர்னிங்சைட் அவனியூவிற்கு (Morningside Ave) அருகே, Old Finch Avenue மற்றும் Forest Creek Pathway பகுதியில், இன்று அதிகாலை இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை 1:30 மணிக்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்து வெற்றுத் தோட்டாக்கள் சிலவற்றை மீட்டுள்ளதுடன், அங்கிருந்த வாகனம் ஒன்றின் மீதும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதனை அவதானித்துள்ளனர்.

எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவரும் காயமடைந்தமை குறித்த முறைப்பாடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சந்தேக நபர்கள் குறித்த விபரங்களும் வெளியிடப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.