காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 25வயது ஆண் பலி

ரொரன்ரோவின் வட பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் போது, 25 வயது ஆண் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

டஃப்பிரின் வீதி மற்றும் மேஜர் மக்கென்ஸி டிரைவ் வெஸ்ட் பகுதியில் அமைந்துள்ள, றோயல் வங்கிக் கிளையில் நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர், அங்கு ஆயுததாரி ஒருவர் இருப்பதை அறிந்து, குறித்த அந்த வங்கிக் கிளையைச் சுற்றிவளைத்துள்ளனர்.

குறித்த அநத ஆயுததாரி அங்கிருந்த மக்களை பணயக் கைதிகளாக வைத்திருக்க முயன்றதாகவும், அந்த வேளையில் தம்மால் முடிந்த வரையில் அங்கிருந்த மக்களை வெளியேற்றும் முயற்சியில் முதலில் தாங்கள் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதிலும், அங்கே வங்கி பணியாளர்கள் உடபட பொருமக்கள் சிலர் சிக்குண்டிருந்ததாகவும், இவ்வாறான நிலையிலேயே, ஆயுததாரியைக் கட்டுப்படுத்த ஆயுதப் பிரயோகம் அவசிமானதாகவும் அவர் சம்பவம் தொடர்பில் விபரித்துள்ளார்.

குறித்த அந்த சந்தேக நபரைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் வகையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்போது அந்த துப்பாக்கிதாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட வேளையில், அந்த வங்கிக் கிளைக்குள் பொதுமக்கள் ஐந்து பேர் இருந்ததாகவும், எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், துப்பாக்கிப் பிரயோகத்தினை அவர்கள் நேரில் பார்த்தார்களா என்பது தெரியவில்லை எனவும் சம்பவ இடத்திலிருந்த காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஒன்ராறியோ சிறப்பு புலனாய்வுப் பிரிவினர், கொல்லப்பட்டவர் 25 வயது ஆண் என்பதை உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்ற விபரங்கள் எதனையும் உடனடியாக வெளியிடவில்லை.

இந்த சம்பவத்தின் போது குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் உள்ளிட்ட சிறப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.