கார்டினர் அதிவிரைவுச் சாலை விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் காயம்

இன்று அதிகாலை கார்டினர் அதிவிரைவுச் சாலையில், காவல்துறை வாகனம் ஒன்று பிறிதோரு வாகனத்தினால் மோதுண்டதில், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.


நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், சவுத் கிங்ஸ்வே வீதிப் பகுதியில், இன்று அதிகாலை 3.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றிற்கு உதவுவதற்காக சென்ற ரொரன்ரோ காவல்துறை உத்தியோகத்தர், தனது வாகனத்தை நிறுத்திய வேளையில், பின்புறமாக வந்த பிறிதொரு வாகனம், காவல்துறை வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

குறித்த அந்த காவல்துறை வாகனத்தில் ஒரு அதிகாரி மட்டுமே இருந்ததாகவும், அவர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும், அதனுடன் மோதிய வாகனத்தினை செலுத்திவந்த பெண் சாரதிக்கு காயங்கள் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தினர் என்ற குற்றசாட்டை எதிர்கொள்கிறார்

இந்த சம்பவத்தினை அடுத்து, நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்துகள் சிறிது நேரத்திற்கு தடைப்பட்டிருந்த போதிலும், தற்போது போக்குவரத்துகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.