றெக்ஸ்டல் பகுதியில் அயல் வீட்டிற்கு தீ வைத்தவர் கைது!

இன்று அதிகாலை வேளையில் றெக்ஸ்டல் பகுதியில் உள்ள மாடி வீடு ஒன்று மற்றும் வாகனம் ஒன்றுக்கு தீ வைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கிப்பிளிங் அவெனியூ மற்றும் றெக்ஸ்டல் புளோவாட் பகுதியில், ஆபோடேல் வீதியில் இன்று அதிகாலை 12.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்த மாடிக் குடியிருப்பின் வீடு ஒன்றில் இருப்பவரே, தனது அயல் வீட்டுக்கும் அங்கிருந்த வாகனம் ஒன்றுக்கும் தீ வைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த அந்த ஆண் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் தீ வைத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை தீப் பரவலுக்கு உள்ளான வீட்டில் இருந்த பெண்ணும் அவரது பிள்ளையும் காயங்கள் எவையும் இனறி காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்ககப்படுகிறது.

குறித்த இந்த தீப்பரலை அடுத்து, அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் இருந்த அனைவரும் முற்பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட போதிலும், தற்போது அவர்கள் மீண்டும் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.