அதிகரிக்கும் சிறுவர்கள் குழந்தைகள் பராமரிப்புக்கான செலவீனம்

நாட்டின் பணவீக்க அதிகரிப்பினை விடவும், சிறுவர்கள் குழந்தைகள் பராமரிப்புக்கான செலவீனம் வேகமாக அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வுகள் காட்டுகின்றன.


கனேடிய மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கை முடிவுகளில், நகரங்களில் 2016ஆம் ஆண்டிலிருந்த தற்போது வரையில் சிறுவர் பராமரிப்பு செலவீனம் 71 சதவீத அதிகரிப்பினை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான 28 நகரங்களிடையே ஏற்பட்டுவரும் சிறுவர் பராமரிப்பு செலவீனங்கள் தொடர்பில், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்டுள்ள நான்காவது ஆய்வு இது என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் 18 மாதங்களில் இருந்து இரண்டு வயது வரையிலான குழந்தைகளைப் பராமரிக்கும் முழு நேரக் காப்பகங்கள், இரண்டிலிருந்து மூன்று வயது வரையான சிறுவர்களுக்கான காப்பகங்கள் மற்றும் நான்கிலிருந்து ஆயு வயது சிறுவர்களுக்கான முன்பள்ளிகள் ஆகியவற்றின் செலவீன அதிகரிப்புகள் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் சிறுவர் பராமரிப்பு செலவீனம் மோசமான அதிகரிப்பை எட்டியுள்ளதாகவும், பெற்றோர்கள் இதற்கான கட்டணங்களைச் செலுத்துவதற்க பெரிதும் சிரமப்படுவதாகவும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் மூத்த பொருளியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் இவ்வாறான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அதிக அளவிலான அதிகரிப்பு ரொரன்ரோவிலேயே காணப்படுவதாகவும், குழந்தைகளைப் பராமரிப்பதற்காக ரொரன்ரோவில் மாதத்துக்கு 1,758 டொலர்கள் வரையில் செலவிடவேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை மிசிசாக மற்றும் வோன் பகுதிகளில் மாதத்திற்கு 1,400 டொலர்கள வரையில் குழந்தைகள் பராமரிப்பு செலவீனம் காணப்படுவதாகவும், ஆரம்பப் பள்ளிகளுக்கு ரொரன்ரோவில் மாதத்துக்கு 1,212 டொலர்களும், ஒட்டாவா, கல்கரி, றிச்மண்ட் மற்றும் வன்கூவர் ஆகிய நகரங்களில் ஆயிரம் டொலர்கள் வரையில் தேவைப்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.