பருவகாலத்தின் முதலாவது பனிப்பொழிவு: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

இந்த பருவகாலத்தின் முதலாவது பலத்த பனிப்பொழிவை ரொரன்ரோ நகர் உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகம் எதிர்கொள்ளும் நிலையில், மிகவும் மெதுவாக வாகனங்களைச் செலுத்துமாறு ரொரன்ரோ காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரொரன்ரோ நகரில் இன்று காலையில் ஏற்கனவே பல வாகன விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் இந்த எச்சரிக்கையினைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நிலவிவரும் பனிப்பொழிவு இன்று முழுவதும் தொடரும் என்று எதிர்பார்ககப்படும் நிலையில், இன்று மேலும் பல வீதி விபத்துக்ள பதிவாகக் கூடும் எனவும் காவல்துறையினர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதுவரை இடம்பெற்ற விபத்துகளில் பெரும்பாலானவை ஒரு வாகனம் மட்டும் தொடர்புடைய விபத்துகள் எனவும், நெடுஞ்சாலை 401இல், விக்டோரியா பார்க் பகுதியில் இணைப்பு கொள்கலனுடனான கனரக வாகனம் ஒன்று, மேற்கு நோக்கிய அதிவேக வழித்தடங்களுக்கு குறுக்காக நிற்பதனால், அதனூடான போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நெடுஞ்சாலை 401இன் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், அலென் வீதிப் பகுதியில் இரண்டு சரக்கு ஊர்திகளும், இணைப்பு கொள்கலனுடனான கனரக வாகனம் ஒன்றும் தொடர்புபட்ட விபத்து சம்பவித்துளளதால், அந்த பகுதி ஊடான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், இன்று காலையில் பணி நிமித்தம் பயணிக்கும் சாரதிகள், சிறிது நேரம் முன்பாகவே புறப்பட்டுச் செல்லுமாறும், முடிந்தவரை அவதானமாக மெதுவாக பயணிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக பாலங்கள், மேம்பாலங்கள், அதி விரைவுச் சாலைகள் போன்ற இடங்களிலும், ஏற்ற இறக்கங்களுடனான வீதிகளிலும் அதிக கவனம் செலுத்துமாறும் ரொரன்ரோ காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை சிறப்பு பனிப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ரொரன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில், இன்று அதிகாலை 4 மணி வரையிலான நிலவரப்படி, பல இடங்களிலும் 8 இலிருந்து 10 சென்ரிமீட்டர் வரையில ்பனிப்பொழிவு பதிவாகியுள்ளதுடன், மேலும் 5 சென்ரிமீட்டர் வரையிலான பனிப் பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.