விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்: உள்ளிருந்த நோயாளிக்கு நேர்ந்த சோகம்

கனடாவில் நோய் வாய்ப்பட்ட முதியவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் முதியவர் உயிரிழந்துள்ளார்.

நோவ ஸ்கோடியா மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. உடல்நல கோளாறு காரணமாக 89 வயது முதியவர் ஒருவர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு யார்மவுத் பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆம்புலன்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் மோதியுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வேறு ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ ஊழியர்கள் விபத்து நடந்த ஆம்புலனஸ் உள்ளே இருந்த முதியவர் மற்றும் இரண்டு மருத்துவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

அங்கு முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், ஆம்புலன்ஸ் விபத்தால் தான் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

முதியவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை எப்போது நடக்கும் என தெரியாது என கூறியுள்ள பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.