பிரிட்ஷ் கொலம்பியாவில் வாயுக் கசிவு: பலர் மருத்துவமனையில்

பிரிட்ஷ் கொலம்பியாவின் டெல்டா பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த அந்த பண்ணையில் கார்ப்ன ஓரோட்சைட் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் குறைந்தது 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பிரிட்ஷ் கொலம்பிய அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு பாரிய அனர்த்த மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டதாகவும், சுமார் பத்து அவசர மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில் குறைந்தது 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்ஷ் கொலம்பியாவின் வின்செட்  பண்ணைகளில் இந்த அனர்த்தம் சம்பவிததுள்ள நிலையில், மெட்ரோ வன்கூவர் வட்டாரத்தில் உள்ள மருத்துவமனைகளிலேயே பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த அந்த பண்ணையில் சுத்திகரிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் உயர் அழுத்த இயந்திரம் ஒன்றிலிருந்தே இந்த நச்சு வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.