பிரதான நெடுஞ்சாலையில் வேக வரம்பிற்கு குறைவாக வாகனம் செலுத்திய பெண்

ஒண்டாரியோ மாகாணத்தில் FRONT OF YONGE TOWNSHIP பகுதியில் பெண் ஒருவர் நெடுஞ்சாலை 401ல் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர்களிற்கும் குறைவாக-நெடுஞ்சாலை 401-கிழக்கில் வேக வரம்பிற்கு குறைவான வேகத்தில்- வாகனம் செலுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டார்.


புதன்கிழமை இரவு குறிப்பிட்ட நெடுஞ்சாலை கிழக்குப்பாதையில் வாகனம் ஒன்று புறொக்வில் அருகில் 40 கிலோமீற்றர்கள் (Km/h) வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக பல தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்ததாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் தெரிவித்துள்ளது.

வாகனத்தின் ஹெட்லைட்களும் பிரகாசமாக இருந்ததுடன் வாகனம் வீதியின் வேக பாதையில் சென்று கொண்டிருந்ததெனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

வீதியில் இருந்து வாகனத்தை வெளியேற்ற ஒன்ராறியோ மாகாண பொலிசார் பல முயற்சிகள் செய்தும் பலனளிக்காததால் அதிகாரிகள் தங்கள் வாகனங்களை குறிப்பிட்ட வாகனத்திற்கு முன்னால் நிறுத்தி நெடுஞ்சாலையில் இருந்து காரை வெளியேற்றினர்.

காரின் சாரதி வீதியின் வேக வரம்பு 50 km/h.என தான் நம்பியதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

அநாவசியமான மெதுவான ஓட்டுதல், அறிகுறிகளை அவதானிக்க தவறியமை மற்றும் காப்பீட்டு அட்டை வைத்திருக்காதமை போன்ற குற்றச்சாட்டுக்கள் 47-வயதுடைய குறிப்பிட்ட பெண்மீது சுமத்தப்பட்டுள்ளது.