பேர்ளிங்டனில் உணவு பதனிடும் தொழிற்சாலை தீக்கிரை

பேர்ளிங்டனில் உணவு பதனிடும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட மோசமான தீ பரவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பேர்ளிங்டனில் நேற்றுப் பிற்பகல் நான்கு மணியளவில் ஏற்பட்ட தீப்பரவலில் அந்த உணவு பதனிடும் தொழிற்சாலைக் கட்டிடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

குயீன் எலிசபெத் வே (Queen Elizabeth Way) மற்றும் அப்பிள்பேலைன் (Appleby Line) வீதிப் பகுதியில் அமைந்துள்ள பலீட்ட இன்டர்நாசனல் (Paletta International) எனப்படும் நிறுவனத்திற்கு சொந்தமான இறைச்சி பதனிடும் உணவு உற்பத்தி தொழிற்சாலையே அவ்வாறு  தீக்கிரையாகியுள்ளது.

குறித்த இந்த தீப்பரல் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய புகை மூட்டத்தினை பல கிலோமீடட்ர் தொலையில் உள்ள நெடுஞ்சாலையில் இருந்தே பார்க்க முடிந்ததாகவும், இந்த தீயினால் ஏற்பட்டுள்ள புகை அந்த பிராந்தியத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு பார்வைப்புல பாதிப்பினை ஏற்படுத்தும் அளவு மோசமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் 14 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 40 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

எனினும் இந்த தீ பரவல் ஏற்பட்டதற்கான காரணங்கள் இன்னமும் வெளியிடப்படாத அதேவேளை, அதிகாரிகளின் விசாரணை தொடர்வதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.