கனேடியப் பிரதமர் சீனாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தனது நான்கு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சீனாவில் இருந்து புறப்பட்டுள்ளார்.


உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாள சீனாவுக்கு வர்த்தகப் பயணத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர், அங்கு பல்வேறு பொருளில் நலன்சார் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார்.

இருந்த போதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுவரும் சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான தடையற்ற பொருளாதார உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்த முடிவுகள் எவையும் பிரதமரின் இந்த பயணத்தின் போது எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில் குறித்த இந்த உடன்படிக்கை விரைவில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பினை கனேடியர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் சில தரப்புகளால் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தனது சீனப் பயணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, சீனாவின் அரசாங்க வர்த்தக நிறுவனங்களுடன் கனடா எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் அது குறித்த வேறுபாடுகளையும் அறிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கனேடியர்களின் பெறுமானங்களை மரியாதைக்குரிய வகையில் கவனத்தில் கொண்டு செயற்படுவதில் தாம் எப்போதும் உறுதி கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீனாவுடனான தடையற்ற பொருளாதார வர்த்தக உடன்படிக்கை அவ்வளவு சுலபமாக எய்தப்பட்டு விடும் என்ற மாயையில் கனேடியர்கள் இருக்கக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.