கனடா தூதர் பலாலி,உதயனிற்கு விஜயம்!

யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த கனடாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர், டேவிட் மெக்கினோன்,பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் உதயன் பத்திரிகை அலுவலகங்களிற்கு விஜயம் செய்துள்ளார்.அவருடன் கொழும்பிலுள்ள கனேடிய உயர் ஸ்தானிகரின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் திருமதி. ஜெனிபர் ஹார்ட் இணைந்து விஜயம் செய்திருந்தார். பயணத்தின் போது யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியையும் அவர் சந்தித்தார்.


இச்சந்திப்பின் போது போருக்குப் பிந்தைய சூழல் மீள மக்கள் வாழ்வை கட்டியெழுப்புவதிலான முயற்சிகளிலும் இராணுவத்தின் பொறுப்புகள் மற்றும் பாத்திரங்கள் தொடர்பாக பேசப்பட்டதாக தெரியவருகின்றது.சந்திப்பின் போது படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான தனியார் நிலங்களை விடுவிப்பதில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றத்தை பற்றி விவாதித்ததாகவும் படைத்தரப்பு அறிவித்துள்ளது.

சந்திப்பின் முடிவில், மேஜர் ஜெனரல் தரஸஷன ஹெட்டியாராச்சி கனேடிய உயர் ஸ்தானிகருக்கு ஒரு நினைவுச்சின்னத்தை வழங்கினார்.

அதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் நாளிதழ் அலுவலகத்திற்கும் அவர் பயணித்துள்ளார்.அங்கு படையினர் மற்றும் துணை ஆயுதக்குழுக்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களது புகைப்படங்களை பார்வையிட்டார்.