சில நாடுகளுக்கு குடிநுழைவுத் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள கனடா

றொமேனியா மற்றுல் பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் கனடாவுக்குள் நுளைவதற்கான குடிநுழைவுக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள கனடா, குறித்த நாடுகளைச் சேர்ந்தோர் நுழைவிசைவு இன்றி கனடாவுக்கு பயணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

நேற்று அதிகாலை நான்கு மணியில் இருந்து இந்த நுளைவிசைவு நீக்கம் நடப்புக்கு வநதுள்ளதாகவும், அதன்படி றொமேனியா மற்றுல் பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் இனி கனடாவுக்கு வருவதற்கு வீசா எனப்படும் நுளைவிசைவுகளை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வர்த்தக பயணங்களை மேற்கொள்வோர், தமது குடும்பத்தார் நண்பர்களை பார்ப்பதற்காக கனடாவுக்கு வருவோர் மற்றும் சுற்றுலா பயணம் மேற்கொள்வோர், ஆறு மாதங்களுக்கும் குறைவான குறுகிய கால பயணங்களுக்கு கனடாவின் நுழைவிசைவினை முற்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நுழைவிசைவு தேவையற்ற ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களைப் போலவே, றொமேனியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் தமது பயணத்தின்போது eTA எனப்படும் இலத்திரனியல் பயண அனுமதி ஆவணத்தினை கொண்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இவ்வாறான ஆவணங்களை அவர்கள் தமது பயணத்திற்கு முன்னரே பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதனால், குறித்த நாடுகளைச் சேர்நத நபர்கள், கனடாவுக்கான விமானத்தில் ஏறுவதற்கு முன்னரே அது குறித்த விபரங்களை அதிகாரிகள் பரிசோதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த இரண்டு நாடுகளுக்குமான நுளைவிசைவு தவிர்ப்பு குறித்த பேச்சுக்கள் கடந்த 2014ஆம் ஆட்டிலேயே ஆரம்பமாகியிருந்த போதிலும், தற்போது கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதிகரித்துவரும் உறவுகள் மற்றும் றொமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது இந்த நுளைவிசைவு நீக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

றொமேனியா, பல்கேரியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்று்டன் பலமான பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதனை கனடா விரும்புவதாகவும், ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்களைச் சேர்ந்தோர் நுளைவிசைவு இன்றி கனடாவுக்கு பயணிக்க வகைசெய்யும் இந்த அறிவிப்பினை வெளியிடுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் கனடாவின் மத்திய குடிவரவுதுறை அமைச்சர் அஹ்மட் ஹுசெய்ன் இது குறித்து விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.