வட அமெரிக்காவின் கூட்டுப் பாதுகாப்பு முன்னுரிமைகள் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன், கனடாவிற்கு இரகசிய ஆவணமொன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஆவணத்திற்கு ஒட்டாவா தரப்பில் இதுவரை முறையானதும் நம்பகத்தகுந்ததுமான பதில் வழங்கப்படவில்லை என அமெரிக்காவின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கனடா – அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் பதற்றமான நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Donald Trump நிர்வாகத்தின் கீழ், கூட்டுப் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் F-35 போர் விமானக் கொள்முதல் தாமதம் தொடர்பாக அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது. மேலும், இருதரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் குழுவான Permanent Joint Board on Defense இன் செயல்பாடுகளையும் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
NATO அமைப்பின் இலக்குகளின்படி, கனடா 2025ஆம் ஆண்டில் 63.4 பில்லியன் டாலர்களை பாதுகாப்பிற்காக செலவிட்டு, முதன்முறையாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2 சதவீத பாதுகாப்புச் செலவு இலக்கை எட்டியுள்ளது.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 82 பில்லியன் டாலர்களை பாதுகாப்புத் துறைக்காக செலவிடத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் David McGuinty-யின் ஊடகப் பிரிவு பணிப்பாளர் Alice Hansen தெரிவித்துள்ளார்.
இருப்பினும், 2035ஆம் ஆண்டிற்குள் GDP-யின் 5 சதவீதத்தை பாதுகாப்புச் செலவாக உயர்த்தும் புதிய NATO இலக்கை அடைவதற்கான தெளிவான திட்டம் கனடாவிடம் இல்லை என பென்டகன் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்பான வெளிப்படையான நிதி வரைபடத்தை பிரதமர் Mark Carney சமர்ப்பிக்க வேண்டும் என கனடாவின் முன்னாள் நிதி கண்காணிப்பாளர் Kevin Page வலியுறுத்தியுள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.