கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணம், லுனென்பர்க் கவுண்டியில் சாலைப் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் இடம்பெற்ற தொடர் வாகன விபத்தில், ஒட்டாவாவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளியர்லாண்ட் பகுதியில் உள்ள 103ஆம் இலக்க நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் ஒரு வழிப் போக்குவரத்துக்காக தற்காலிக சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்ததுடன், வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
அப்போது, மேற்கு நோக்கி அதிவேகமாக வந்த டாட்ஜ் ராம் ரக லொறி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலைப் புனரமைப்புப் பகுதிக்குள் புகுந்துள்ளது. பின்னர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த டொயோட்டா RAV4 காரின் மீது பலமாக மோதியதுடன், அருகில் இருந்த ஜீப் செரோக்கி காரின் மீதும் மோதி நின்றுள்ளது.
இந்த விபத்தில், டொயோட்டா காரை ஓட்டி வந்த ஒட்டாவாவைச் சேர்ந்த 65 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த 64 வயது பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும், நான்காவது வாகனமும் லேசான சேதத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் சாலைப் பணியாளர்கள் யாரும் பணியில் ஈடுபட்டு இருக்கவில்லை. இதனால் மேலும் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்தப் பகுதியில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகக் கட்டுப்பாடு அமலில் இருந்தது.
விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் லொறியை ஓட்டி வந்த 26 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுமா என்பது குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.